சுடச்சுட

    
    maria

    ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு வைல்ட்கார்டு வழங்கப்பட்டுள்ளது.
    ஊக்கமருந்து தடைக்குப் பிறகு சர்வதேச டென்னிஸுக்கு திரும்பிய ஷரபோவா விளையாடவுள்ள முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டி இது.
    ஷரபோவா, கடந்த ஏப்ரல் மாதமே தடைக்காலத்தை முடித்துவிட்டபோதிலும், பிரெஞ்சு ஓபனில் அவருக்கு வைல்ட்கார்டு மறுக்கப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற விம்பிள்டனில் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கேற்கவில்லை.
    இந்த நிலையில் ஷரபோவாவுக்கு வைல்ட்கார்டு வழங்கியுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் சங்கம் கூறியிருப்பதாவது: ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக ஷரபோவாவுக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் முடிந்துவிட்டது. அதனால் வைல்ட்கார்டு வழங்கும்போது அதை கருத்தில் கொள்ள வேண்டிய தேவையில்லை. பயிற்சி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான ஷரபோவாவுக்கு வைல்ட்கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற மார்ட்டினா ஹிங்கிஸ், லெய்டன் ஹெவிட், கிம் கிளிஸ்டர்ஸ், ஜுவான் மார்ட்டின் போன்றவர்களுக்கு வைல்ட்கார்டு வழங்கப்பட்டுள்ளது.
    இதுதவிர அமெரிக்க டென்னிஸ் சங்கத்தின் டென்னிஸ் பயிற்சி முகாமில் ஷரபோவா கலந்துகொண்டு ஊக்கமருந்து விழிப்புணர்வு பற்றி பேசவுள்ளார் என தெரிவித்துள்ளது.
    முன்னாள் முதல் நிலை வீராங்கனையான ஷரபோவா 2006-இல் அமெரிக்க ஓபனிலும், 2008-இல் ஆஸ்திரேலிய ஓபனிலும், 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் பிரெஞ்சு ஓபனிலும், 2014-இல் விம்பிள்டனிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
    ஷரபோவாவிற்கு வைல்ட்கார்டு வழங்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள வீனஸ் வில்லியம்ஸ், 'கடந்த காலங்களில் அமெரிக்க ஓபனில் ஷரபோவா சிறப்பாக ஆடியுள்ளார். அதே போட்டியில் மீண்டும் களமிறங்குவது அவருக்கு மிகச்சிறந்த தருணமாகவும், நல்ல வாய்ப்பாகவும் இருக்கும். அவருக்கு வைல்ட்கார்டு கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதை பிரச்னையாக்கக் கூடாது'
    என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai