Enable Javscript for better performance
புரோ கபடி: தமிழ் தலைவாஸ்-ஹரியாணா ஆட்டம் 'டை'- Dinamani

சுடச்சுட

    
    kabadi

    ஆமதாபாதில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய தமிழ் தலைவாஸ்-ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணிகள்.

    5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ்-ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 25-25 என்ற புள்ளிகள் கணக்கில் 'டை'யில் முடிந்தது.
    ஆமதாபாதில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே ரைடின் மூலம் புள்ளிக் கணக்கைத் தொடங்கியது ஹரியாணா. 3-ஆவது நிமிடத்தில் ஹரியாணா 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு பிறகு தொடர்ச்சியாக 3 புள்ளிகளைக் கைப்பற்றிய தமிழ் தலைவாஸ் அணி, 5-ஆவது நிமிடத்தில் 5-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
    இதன்பிறகு அபாரமாக ஆடிய ஹரியாணா 9-7 என்ற கணக்கில் முன்னிலை பெற, அதற்கு தமிழ் தலைவாஸ் அணி பதிலடி கொடுத்தது. இதனால் 18-ஆவது நிமிடத்தில் இரு அணிகளும் 10-10 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இதன்பிறகு அடுத்தடுத்து 3 புள்ளிகளைப் பெற்ற ஹரியாணா, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 13-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் பாதி ஆட்டத்தைப் பொறுத்தவரையில் இரு அணிகளின் பின்கள வீரர்களும் அபாரமாக செயல்பட்டனர். அதனால் இரு அணிகளுக்கும் டேக்கிள்கள் மூலமே பெரும்பாலான புள்ளிகள் கிடைத்தன.
    பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட தமிழ் தலைவாஸ் அணி, 24-ஆவது நிமிடத்தில் ஹரியாணாவை ஆல் அவுட்டாக்கியது. இதன்மூலம் தமிழ் தலைவாஸ் அணி 17-14 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 26-ஆவது நிமிடம் வரை தமிழ் தலைவாஸின் கையே ஓங்கியிருந்தது.
    ஆனால் பின்னர் மெதுவாக சரிவிலிருந்து மீண்டது ஹரியாணா. 35-ஆவது நிமிடத்தில் இரு அணிகளும் 22-22 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. கடைசி 5 நிமிடங்களில் இரு அணிகளும் அபாரமாக ஆட, 39-ஆவது நிமிடத்தில் ஹரியாணா 25-24 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதனால் ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது. ஆனால் கடைசி நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் வீரர் டாங் ஜியோன் லீ தனது சிறப்பான ரைடின் மூலம் ஒரு புள்ளியைப் பெற்றுத் தர, தமிழ் தலைவாஸ் தோல்வியிலிருந்து தப்பியது. ஆட்டம் 25-25 என்ற கணக்கில் 'டை'யில் முடிந்தது.
    தமிழ் தலைவாஸ் வீரர் பிரபஞ்சன் ரைடின் மூலம் 7 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார். அதேநேரத்தில் ஹரியாணா வீரர் சுரேந்தர் நாடா சிறப்பான டேக்கிள் மூலம் 7 புள்ளிகளைக் கைப்பற்றினார்.
    குஜராத் வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி 29-19 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியைத் தோற்கடித்தது.
    இன்றைய ஆட்டங்கள்
    தபாங் டெல்லி-தமிழ் தலைவாஸ்
    நேரம்: இரவு 8
    குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ்-
    பெங்கால் வாரியர்ஸ்
    நேரம்: இரவு 9
    இடம்: ஆமதாபாத்
    நேரடி ஒளிபரப்பு:
    ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai