சுடச்சுட

    

    ஐரோப்பிய ஹாக்கித் தொடர்: ஆஸ்திரியாவை வீழ்த்தியது இந்தியா

    By DIN  |   Published on : 18th August 2017 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    hocky

    வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய இந்தியா-ஆஸ்திரியா அணிகள்.

    ஐரோப்பிய ஹாக்கித் தொடரின் கடைசி ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை தோற்கடித்தது.
    இதன்மூலம் ஐரோப்பிய தொடரை வெற்றியோடு நிறைவு செய்துள்ளது மன்தீப் சிங் தலைமையிலான இளம் இந்திய அணி. இந்தத் தொடரில் 5 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி, 3 வெற்றிகளையும், இரு தோல்விகளையும் சந்தித்தது.
    நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற 5-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரியாவை எதிர்கொண்டது இந்தியா. இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இந்திய அணி பந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோதும், 14-ஆவது நிமிடத்தில் ஆஸ்திரிய வீரர் ஆலிவர் பிந்தர்ஸ் கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    இதன்பிறகு 25-ஆவது நிமிடத்தில் ஆஸ்திரியாவுக்கு பதிலடி கொடுத்தது இந்தியா. அமித் ரோஹிதாஸ் கொடுத்த பாஸை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரமன்தீப் சிங், அதை கோலாக்க, ஸ்கோர் சமநிலையை (1-1) எட்டியது.
    தொடர்ந்து அபாரமாக ஆடிய இந்திய அணி 32-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோலை அடித்தது. இந்த கோலையும் ரமன்தீப் சிங்கே அடித்தார். அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தபோதும், அதை கோலாக்க முடியவில்லை.
    37-ஆவது நிமிடத்தில் மன்தீப் சிங் மற்றொரு கோல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க, அதில் துணை கேப்டன் சிங்லென்சனா சிங் கோலடித்தார். இதனால் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    ஆட்டம் முடிய 15 நிமிடங்கள் இருந்தபோது இந்தியா 3-1 என முன்னிலையில் இருந்ததால், ஆஸ்திரியா படுதோல்வியடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 53-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மைக்கேல் கார்பர் கோலடிக்க, 55-ஆவது நிமிடத்தில் பாட்ரிக் ஸ்கிமிட் கோலடித்தார். இதனால் ஸ்கோர் 3-3 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.
    இதனால் கடைசி சில
    நிமிடங்கள் பரபரப்பாக இருந்தது. ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆட்டம் முடிய 10 விநாடிகளே இருந்த நிலையில் குர்ஜந்த் கொடுத்த கிராஸை பயன்படுத்தி சிங்லென்சனா சிங் கோலடிக்க, இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai