Enable Javscript for better performance
சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் நடால் : வீனஸ், கெர்பர், ஸ்வெரேவ் வெளியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் நடால் : வீனஸ், கெர்பர், ஸ்வெரேவ் வெளியேற்றம்

    By DIN  |   Published on : 18th August 2017 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tennis

    சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
    அதேநேரத்தில் மற்றொரு முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், முன்னணி வீராங்கனைகளான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் 2-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தரவரிசை அடிப்படையில் நேரடியாக 2-ஆவது சுற்றில் களமிறங்கிய நடால், அதில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட்டை தோற்கடித்தார்.
    இதுவரை ரிச்சர்ட் காஸ்கட்டுடன் 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நடால், அவையனைத்திலும் வெற்றி கண்டுள்ளார். காஸ்கட்டுடன் கடைசியாக மோதிய 10 ஆட்டங்களில் நடால் நேர் செட்களில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
    நடால் தனது மூன்றாவது சுற்றில் சகநாட்டவரான ஆல்பர்ட் ரேமோஸை சந்திக்கிறார். ஆல்பர்ட்டுடன் இதுவரை 3 ஆட்டங்களில் மோதியுள்ள நடால், அந்த மூன்றிலும் வெற்றி கண்டுள்ளார்.
    வாஷிங்டன் மற்றும் மான்ட்ரியால் நகரில் நடைபெற்ற டென்னிஸ் போட்டிகளில் அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தனது 2-ஆவது சுற்றில் 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வைல்ட்கார்டு வீரரான பிரான்செஸ் டியாஃபோவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
    இதற்கு முன்னர் ஸ்வெரேவிடம் இரு முறை தோல்வி கண்டிருந்த டியாஃபோ, இப்போது முதல்முறையாக அவரை வீழ்த்தியிருக்கிறார்.
    அது குறித்துப் பேசிய டியாஃபோ, 'ஸ்வெரேவை வீழ்த்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு நானும், ஸ்வெரேவும் தொடர்ந்து விளையாடவிருக்கிறோம். அதனால் அவரிடம் தொடர்ச்சியாக தோற்கக்கூடாது என நினைத்தேன்' என்றார்.
    டியாஃபோ தனது 3-ஆவது சுற்றில் சகநாட்டவரும், உலகின் முன்னணி வீரர்களில் ஒருவருமான ஜான் இஸ்னரை சந்திக்கிறார்.
    பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 7-6 (5), 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் பெலிஸியானோ லோபஸையும், ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் 6-4, 6-7 (5), 6-1 என்ற செட் கணக்கில் செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச்சையும் தோற்கடித்து 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
    வீனஸ், கெர்பர் தோல்வி: மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த ஏஞ்ஜெலிக் கெர்பர் 4-6, 6-1, 6-7 (11) என்ற செட் கணக்கில் ரஷியாவின் எக்டெரினா மகரோவாவிடம் தோல்வியடைந்தார்.
    ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பர்ட்டி 6-3, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸைத் தோற்கடித்தார். ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் கஜகஸ்தானின் யூலியாவையும், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ரஷியாவின் எலினா வெஸ்னினாவையும், அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் பெட்ரா கிவிட்டோவாவையும் வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

    ராம்குமார் தோல்வி
    ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் தோல்வியடைந்தார். அவர் 4-6, 6-2, 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வைல்ட்கார்டு வீரரான ஜேர்டு டொனால்டுசனிடம் தோல்வி கண்டார்.
    தொடர்ந்து 2-ஆவது முறையாக ஜேர்டிடம் தோல்வி கண்டுள்ளார் ராம்குமார். இதற்கு முன்னர் பிரெஞ்சு ஓபன் தகுதிச் சுற்றில் ராம்குமாரை வீழ்த்தினார் ஜேர்டு டொனால்டுசன்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai