Enable Javscript for better performance
புரோ கபடி: தபாங் டெல்லி 'த்ரில்' வெற்றி: கடைசி நிமிடத்தில் வெற்றியைப் பறிகொடுத்த தமிழ் தலைவாஸ்- Dinamani

சுடச்சுட

    

    புரோ கபடி: தபாங் டெல்லி 'த்ரில்' வெற்றி: கடைசி நிமிடத்தில் வெற்றியைப் பறிகொடுத்த தமிழ் தலைவாஸ்

    By DIN  |   Published on : 18th August 2017 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kabadi

    தபாங் டெல்லி ரைடரை மடக்க முயற்சிக்கும் தமிழ் தலைவாஸ் அணியினர்.

    5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 32-ஆவது ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 30-29 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது.
    இந்த ஆட்டத்தில் தொடர்ச்சியாக முன்னிலையில் இருந்த தமிழ் தலைவாஸ் அணி, கடைசி நிமிடத்தில் 3 புள்ளிகளைக் கொடுத்து வெற்றியை கோட்டைவிட்டது.
    ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தங்களின் முதல் ரைடிலேயே புள்ளிகளைப் பெற்றன. தமிழ் தலைவாஸ் பின்கள வீரர்கள் ஆரம்பத்தில் தடுமாற, முதல் 5 நிமிடங்களின் முடிவில் டெல்லி அணி 5-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
    இதன்பிறகு தமிழ் தலைவாஸ் பின்கள வீரர்கள் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட, சூப்பர் டேக்கிள்கள் மூலம் புள்ளிகள் கிடைத்தன. இதனால் 9-ஆவது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி 6-5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
    இதன்பிறகு டெல்லி அணி அபாரமாக ஆட, 16-ஆவது நிமிடத்தில் மீண்டும் ஸ்கோரை (9-9) சமன் செய்தது தமிழ் தலைவாஸ். 20-ஆவது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணியில் இரு வீரர்கள் மட்டுமே எஞ்சியிருக்க, அந்த அணி ஆல் அவுட்டாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ் தலைவாஸ் பின்கள வீரர்கள் சூப்பர் டேக்கிள் மூலம் டெல்லி ரைடரை பிடிக்க, ஆல்அவுட்டாவதிலிருந்து தப்பியது. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 12-12 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் இருந்தன.
    பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி அபாரமாக ஆடியது. குறிப்பாக அதன் கேப்டன் அஜய் தாக்குர் தனது சிறப்பான ரைடுகளின் அடுத்தடுத்து புள்ளிகளைக் கைப்பற்றினார். இதனால் 24-ஆவது நிமிடத்தில் 15-12 என முன்னிலை பெற்றது தமிழ் தலைவாஸ். இதன்பிறகு அமித்தின் அற்புதமான டேக்கிள் காரணமாக 27-ஆவது நிமிடத்தில் 16-13 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
    அஜய் தாக்குர் தொடர்ந்து அபாரமாக ஆட, 30 நிமிடங்களின் முடிவில் 19-16 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி முன்னிலை பெற்றது.
    35-ஆவது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி 27-23 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு டெல்லி வீரர் மீரஜ் சேக் இரு புள்ளிகளைப் பெற்றுத் தர, அந்த அணி சரிவிலிருந்து மெதுவாக மீள ஆரம்பித்தது. ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருந்தபோது ஒரு புள்ளிகள் பின்தங்கியிருந்தது டெல்லி. ஆனால் அதன் ரைடர் மீரஜ் சேக், 40 விநாடிகளில் இரு புள்ளிகளைப் பெற, பின்னர் அந்த அணி 30-28 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. கடைசிக் கட்டத்தில் அஜய் தாக்குர் ஒரு புள்ளியைக் கைப்பற்றியபோதும், தமிழ் தலைவாஸ் அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இறுதியில் டெல்லி அணி 30-29 என்ற புள்ளிகள் கணக்கில் 'த்ரில்' வெற்றி கண்டது.
    டெல்லி அணி தரப்பில் ஈரான் வீரர்களான மீரஜ் சேக், அபுல்பாஸில் ஆகிய இருவரும் சேர்ந்து 20 புள்ளிகளைப் பெற்றுத் தந்தனர். தமிழ் தலைவாஸ் தரப்பில் அதன் கேப்டன் அஜய் தாக்குர் 14 புள்ளிகளைக் கைப்பற்றி அசத்தினார்.
    இந்த சீசனில் டெல்லி 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 3-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.
    குஜராத்-பெங்கால் ஆட்டம் 'டை': குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் இடையிலான மற்றொரு ஆட்டம் 26-26 என்ற புள்ளிகள் கணக்கில் 'டை'யில் முடிந்தது.
    'கடைசி நிமிடத்தில் வெற்றியை கோட்டைவிட்டது வருத்தமளிக்கிறது'
    தோல்வி குறித்து தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் பாஸ்கரன் கூறியதாவது: வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தில் தோற்றுவிட்டோம். மோசமாக ஆடி தோற்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் தொடர்ந்து முன்னிலையில் இருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் 3 புள்ளிகளை கொடுத்து தோற்றது வருத்தமாக இருக்கிறது. இந்த தோல்வியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
    எங்கள் கேப்டன் அஜய் தாக்குர் மிக நன்றாக ஆடினார். மைதானத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தபோது, தமிழகம் முழுவதும் உங்கள் மீது அதிக எதிர்பார்ப்புள்ளது. ஊடகங்கள் நீங்கள் சரியாக ஆடவில்லை என விமர்சிப்பதை நினைத்து கவலைப்பட வேண்டாம். அணிக்காக நன்றாக விளையாட வேண்டும் என்ற உணர்வோடு ஆடுங்கள் என தாக்குரிடம் கூறினேன். அதேபோன்று அவரும் சிறப்பாக ஆடிவிட்டார் என்றார்.
    இன்றைய ஆட்டங்கள்
    யு.பி.யோதா-யு மும்பா
    நேரம்: இரவு 8
    பெங்களூரு-ஜெய்ப்பூர்
    நேரம்: இரவு 9
    இடம்: லக்னௌ
    நேரடி ஒளிபரப்பு:
    ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai