துரோணாசார்யா விருது: மாரியப்பன் பயிற்சியாளர் பெயர் நீக்கம்!

துரோணாசார்யா விருதுப் பட்டியலில் இருந்து மாரியப்பன் பயிற்சியாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளது... 
துரோணாசார்யா விருது: மாரியப்பன் பயிற்சியாளர் பெயர் நீக்கம்!

துரோணாசார்யா விருதுப் பட்டியலில் இருந்து மாரியப்பன் பயிற்சியாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 

விளையாட்டுத்துறையில் நாட்டுக்கு நற்பெயரை ஈட்டித்தரும் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர்கள், விளையாட்டு தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு பல்வேறு விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது. நிகழாண்டுக்கான அர்ஜூனா விருது, ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது, துரோணாசார்யா விருது போன்ற விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணா, தடகள பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் காந்தி ஆகியோருடைய பெயர்கள் சிறந்த பயிற்சியாளருக்கு வழங்கப்படும் துரோணாசார்யா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பனின் பெயர், அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவருடைய பயிற்சியாளர் சத்யநாராயணாவின் பெயரும் துரோணாசார்யா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. 

இந்நிலையில், பயிற்சியாளர் சத்யநாராயணா மீது குற்றவழக்கு நிலுவையில் இருப்பதால் துரோணாசார்யா விருதுப் பட்டியலில் இருந்து அவருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வீரரான மாரியப்பன், கடந்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்றார். இந்த வருடத் தொடக்கத்தில் மாரியப்பனைக் கெளரவிக்கும் வகையில் அவருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்தது. தற்போது அர்ஜூனா விருதைப் பெறவுள்ளார் மாரியப்பன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com