சுடச்சுட

  

  தரவரிசையில் முதலிடம் பிடித்ததை நம்ப முடியவில்லை: ரஃபேல் நடால்

  By DIN  |   Published on : 22nd August 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nadal

  சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்திருப்பதை நம்ப முடியவில்லை என்று ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.
  2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் காயம் மற்றும் மோசமான ஃபார்ம் காரணமாக மிகப்பெரிய சரிவைச் சந்தித்தார் நடால். அப்போது அவருடைய டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவே பார்க்கப்பட்டது.
  எனினும் தொடர்ந்து போராடிய நடாலுக்கு 2017-ஆம் ஆண்டு சிறப்பானதாக அமைந்தது. இந்த சீசனில் பிரெஞ்சு ஓபன் உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற நடால், சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில் காலிறுதி வரை முன்னேறியதன் மூலம் மீண்டும் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
  இது குறித்து நடால் கூறுகையில், 'கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்த நிலையில், தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருப்பதை நம்ப முடியவில்லை' என்றார்.
  திங்கள்கிழமை வெளியான புதிய தரவரிசைப்படி நடால் முதலிடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த பிரிட்டனின் ஆன்டி முர்ரே 2-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஸ்விட்சர்லாந்து வீரர்களான ரோஜர் ஃபெடரர், ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் முறையே 3, 4, 5-ஆவது இடங்களில் உள்ளனர்.
  சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கிரிகோர் டிமிட்ரோவ் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். தற்போது அவர் 9-ஆவது இடத்தில் உள்ளார். சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் 5 இடங்கள் முன்னேறி 18-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
  முகுருஸா முன்னேற்றம்: மகளிர் ஒற்றையர் தரவரிசையைப் பொறுத்தவரையில் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். ருமேனியாவின் சைமோனா ஹேலப் தொடர்ந்து 2-ஆவது இடத்தில் உள்ளார்.
  சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்ற ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 3 இடங்கள் முன்னேறி 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். உக்ரைனின் ஸ்விட்டோலினா, டென்மார்க்கின் வோஸ்னியாக்கி ஆகியோர் முறையே 4 மற்றும் 5-ஆவது இடங்களைத் தக்கவைத்துக் கொண்டனர். ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் 3 இடங்களை இழந்து 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai