சொந்த மண்ணில் நாங்களும் சிங்கம்தான்: ஆஸி.,க்கு ஷகிப்-அல்-ஹசன் எச்சரிக்கை

சொந்த மண்ணில் எங்கள் அணியும் சிங்கம்தான் என வங்கதேச நட்சத்திர வீரர் ஷகிப்-அல்-ஹசன் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
சொந்த மண்ணில் நாங்களும் சிங்கம்தான்: ஆஸி.,க்கு ஷகிப்-அல்-ஹசன் எச்சரிக்கை

வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. பின்னர் செப்டம்பர் 4-ந் தேதி 2-ஆவது டெஸ்ட் நடைபெறவுள்ளது.

கடந்த 2011 முதல் ஆசிய கண்டத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. இந்நிலையில், தங்கள் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை ஆவலுடன் எதிர்நோக்கி அந்த அணி காத்திருக்கிறது. 

ஏனெனில் அதுவரை இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய மற்ற ஆசிய அணிகளுடன் தான் ஆஸ்திரேலியா களம் கண்டது. மேலும், கடந்த 2006-ம் ஆண்டில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடைசியாக வங்கதேசத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. 

அதன்பின்னர் இப்போது தான் முதன்முறையாக பயணிக்கிறது. 2011-ம் ஆண்டு முதல் ஆசிய கண்டத்தில் நடந்த டெஸ்ட் தொடர்களில் 3-ல் 2 தொடர்களில் வயிட்-வாஷ் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் வங்கதேசத்துடன் இதுவரையில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றிபெற்றுள்ளது. 

இப்போது உள்ள வங்கேதச அணி முற்றிலும் வித்தியாசமானது. அந்த அணி 1999 முதல் 2004 வரை விளையாடிய 72 சர்வதேசப் போட்டிகளில் 71-ல் தோல்வியை மட்டுமே தழுவியது. ஆனால் அதன்பின்னர் நடந்த ஆட்டங்கள் அனைத்திலும் முதன்மை அணிகளுக்கே கடும் சவால் அளித்து வருகிறது. 

கடந்த வருடம் சாம்பியன்ஸ் டிராஃபி அரையிறுதி வரை முன்னேறியுள்ளது. அதுபோல இங்கிலாந்து, இலங்கை அணிகளுடனான டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று தொடர்களை சமன் செய்தது. ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் 7-ம் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், 27-ந் தேதி துவங்கும் முதல் டெஸ்ட் போட்டியை அடுத்து வங்கதேச அணியின் நட்சத்திர வீரரும் முதன்மை இடத்தில் இருக்கும் ஆல்-ரவுண்டருமான ஷகிப்-அல்-ஹசன் கூறியதாவது:

எங்கள் பலத்தை அறிந்து நாங்கள் விளையாட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் நிச்சயம் எங்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என நான் நம்புகிறேன்.

இந்தத் தொடருக்காக நாங்கள் முழுமையாக தயாராகி உள்ளோம். எங்கள் சொந்த மண்ணில் எங்களை வெற்றிகொள்வது அவ்வளவு எளிதில்லை என்பதை நாங்கள் நன்றாகவே அறிவோம். 

ஏனென்றால் சொந்த மண்ணில் எங்கள் அணியும் சிங்கம்தான். தற்போது அணியில் இடம்பிடித்துள்ள நாங்கள் யாருமே ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இல்லை. எனவே இந்தத் தொடர் மிகவும் விறுவிறுப்புடன் இருக்கும் என நினைக்கிறேன். 

யாரையும் சந்திக்கும் தைரியத்துடன் நாங்கள் உள்ளோம். அந்த துணிவும், நம்பிக்கையும் எங்களை நிச்சயம் வெற்றிபெற வைக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com