சுடச்சுட

  

  ஜஜ்ஜாரியா, சர்தாருக்கு கேல் ரத்னா; மாரியப்பனுக்கு அர்ஜுனா : விருது அறிவித்தது விளையாட்டு அமைச்சகம்

  By DIN  |   Published on : 23rd August 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mariappan

  2017-ஆம் ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பாரா தடகள வீரர் தேவேந்திர ஜஜ்ஜாரியா, இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் சர்தார் சிங் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த பாரா தடகள வீரர் மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது: இந்த ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது வழங்கப்படும் வீரர்கள் பட்டியலையும், துரோணாச்சார்யா விருது வழங்கப்படும் பயிற்சியாளர்கள் பட்டியலையும், தயான் சந்த் விருது வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் பட்டியலையும் மத்திய விளையாட்டு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
  இதன்படி, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனான சர்தார் சிங், 2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற தேவேந்திர ஜஜ்ஜாரியா ஆகியோருக்கு இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படவுள்ளது.
  அர்ஜுனா விருது: அதேபோல், ரியோ பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படவுள்ளது. அவருடன் வில்வித்தை வீராங்கனை சுரேகா, தடகள வீராங்கனை குஷ்பீர் கெளர், தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ், கூடைப்பந்து வீராங்கனை பிரசாந்தி சிங், குத்துச் சண்டை வீரர் லைஷ்ராம் தேவேந்திர சிங், கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா, கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கெளர், கால்பந்து வீராங்கனை ஓய்னம் பெம்பெம் தேவி ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.
  இவர்களுடன், கோல்ஃப் வீரர் எஸ்.எஸ்.பி.செளராஸியா, ஹாக்கி வீரர் சுனில், கபடி வீரர் ஜஸ்பீர் சிங், துப்பாக்கி சுடுதல் வீரர் பி.என்.பிரகாஷ், டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜ், டென்னிஸ் வீரர் சாகேத் மைனேனி, மல்யுத்த வீரர் சத்யவர்த் கடியான், பாரா தடகள வீரர் வருண் சிங் ஆகியோரும் அர்ஜுனா விருது பெறுகின்றனர்.
  துரோணாச்சார்யா விருது: பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது 7 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தடகள பிரிவில் மறைந்த ஆர்.காந்தி, கபடி பிரிவில் ஹீரா நந்த் கட்டாரியா, பாட்மிண்டன் பிரிவில் ஜி.எஸ்.எஸ்.வி.பிரசாத் (வாழ்நாள் சாதனையாளர்), குத்துச்சண்டை பிரிவில் பிரிஜ் பூஷண் மொஹந்தி (வாழ்நாள் சாதனையாளர்), ஹாக்கி பிரிவில் பி.ஏ. ரஃபேல் (வாழ்நாள் சாதனையாளர்), துப்பாக்கி சுடுதல் பிரிவில் சஞ்சய் சக்ரவர்த்தி (வாழ்நாள் சாதனையாளர்), மல்யுத்த பிரிவில் ரோஷன் லால் (வாழ்நாள் சாதனையாளர்) ஆகியோருக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்படவுள்ளது.
  தயான் சந்த் விருது: இதனிடையே, வாழ்நாள் சாதனையாளருக்கான தயான் சந்த் விருது 3 பேருக்கு வழங்கப்படுகிறது. தடகள பிரிவில் பூபேந்தர் சிங், கால்பந்து பிரிவில் செய்யது ஷாஹித் ஹக்கிம், ஹாக்கி பிரிவில் சுமராய் டேடே ஆகியோருக்கு தயான் சந்த் விருது வழங்கப்படவுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai