சுடச்சுட

  

  லோதா குழு பரிந்துரை விவகாரம் பிசிசிஐ தலைவர், செயலருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

  By DIN  |   Published on : 24th August 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  லோதா குழுவின் பரிந்துரையை அமல்படுத்தாதது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்குமாறு பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா, செயலர் (பொறுப்பு) அமிதாப் செளத்ரி, பொருளாளர் அனிருத் செளத்ரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.
  ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கின் ஒரு பகுதியாக பிசிசிஐயை மறுசீரமைப்பு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம். அதைத் தொடர்ந்து லோதா குழு அளித்த பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அதை உடனடியாக அமல்படுத்துமாறு பிசிசிஐக்கு உத்தரவிட்டது.
  ஆனால் இதுவரை பிசிசிஐ அதை அமல்படுத்தவில்லை. இந்த நிலையில் முன்னாள் சிஏஜி வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழு, சமீபத்தில் தனது 4-ஆவது இடைக்கால ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. அதில், 'பிசிசிஐயில் லோதா குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவதற்கு பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா, செயலர் (பொறுப்பு) அமிதாப் செளத்ரி, பொருளாளர் அனிருத் செளத்ரி ஆகியோர் தடையாக இருக்கிறார்கள். அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என பரிந்துரைத்திருந்தது.
  இது தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திராசெளத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவி வரும் மூத்த வழக்குரைஞரான கோபால் சுப்பிரமணியம், 'லோதா குழு பரிந்துரை அமல்படுத்தப்படாததற்கு தற்போதைய தலைவர் சி.கே.கன்னா, செயலர் அமிதாப் செளத்ரி, பொருளாளர் அனிருத் செளத்ரி ஆகியோரே பொறுப்பு' என தெரிவித்தார்.
  அதைத் தொடர்ந்து லோதா குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்படாதது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், 'பிசிசிஐ தலைவர், செயலர், பொருளாளர் ஆகியோர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, லோதா குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்படாதது குறித்தும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாதது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும்' என தெரிவித்தனர்.
  முன்னதாக பிசிசிஐ சிறப்பு பொதுக்குழுவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டது தொடர்பாக பிகார் கிரிக்கெட் சங்கம் சார்பில் பிசிசிஐ செயலர் அமிதாப் செளத்ரி மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், 'முதலில் நிர்வாகக் குழுவின் 4-ஆவது ஆய்வறிக்கை தொடர்பாக விசாரிக்கப்படும். அதன்பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோரும் மனு மீது விசாரணை நடத்தப்படும்' என தெரிவித்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai