சுடச்சுட

    

    அகில இந்திய ஆடவர் கூடைப்பந்து: கோவையில் 27-ஆம் தேதி தொடக்கம்

    By DIN  |   Published on : 25th August 2017 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய ஆடவர் கூடைப்பந்துப் போட்டி வரும் 27-ஆம் தேதி தொடங்குகிறது.
    இதுகுறித்து பி.எஸ்.ஜி. கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி. விளையாட்டு கிளப் தலைவர் பேராசிரியர் ருத்ரமூர்த்தி, உடற்கல்வி இயக்குநர் டி.பழனிசாமி ஆகியோர் கோவையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
    பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கடந்த 52 ஆண்டுகளாக அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 53-ஆவது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி வரும் 27-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
    இதில் 8 முன்னணி அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, புணே இந்திய ராணுவம், சென்னை சுங்கத் துறை, கேரள மின்வாரிய அணிகளும், 2-ஆவது பிரிவில் பஞ்சாப் காவல் துறை, கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலை அணி (ஆர்.சி.எஃப்.), பெங்களூரு விஜயா வங்கி அணி, சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
    இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். இறுதி ஆட்டம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாலையில் நடைபெறுகிறது.
    இதில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு பி.எஸ்.ஜி. சுழற்கோப்பையுடன் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். 2-ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. 3 மற்றும் 4-ஆவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ. 25,000, ரூ.15,000 ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது. சிறந்த வீரருக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai