Enable Javscript for better performance
உலக குத்துச்சண்டை: ஹம்பர்க்கில் இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    
    fight

    19-ஆவது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
    இந்திய வீரர்கள் சிவ தாபா, விகாஸ் கிருஷ்ணன் ஆகியோர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
    10 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் 85 நாடுகளைச் சேர்ந்த 280 குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதில் இந்தியாவின் சார்பில் அமித் பாங்கல் (49 கிலோ), கவிந்தர் பிஸ்த் (52 கிலோ), கெளரவ் பிதுரி (56 கிலோ), சிவ தாபா (60 கிலோ), மனோஜ் குமார் (69 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ), சுமித் சங்வான் (91 கிலோ), சதீஷ் குமார் (+91 கிலோ) ஆகியோர் பங்கேற்கின்றனர்.
    இது குறித்து இந்திய குத்துச்சண்டை பயிற்சியாளர் சான்டியாகோ நீவா கூறியதாவது: இந்திய அணி வலுவான அணியாக இருக்கிறது. ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி இரு வெள்ளி, இரு வெண்கலம் வென்றது. இதன்மூலம் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
    அதன்பிறகு பிரான்ஸ் மற்றும் செக்.குடியரசு நாடுகளில் பயிற்சி பெற்றதோடு, அங்கு நடைபெற்ற பல்வேறு முக்கியப் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். அதில் இந்திய வீரர்களின் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. அதனால் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் அபாரமாக ஆடுவார்கள் என நம்புகிறேன். அதேநேரத்தில் இந்தியாவுக்கு எத்தனை பதக்கங்கள் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க விரும்பவில்லை.
    இந்த உலக சாம்பியன்ஷிப், சற்று வித்தியாசமானதாக இருக்கும். ஏனெனில் எடைப் பிரிவுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்களில் சிலர் இந்த முறை பங்கேற்கவில்லை என்றார்.
    சிவ தாபா கூறுகையில், 'ஒலிம்பிக்கிற்கு அடுத்த பெரிய போட்டி என்றால், அது உலக சாம்பியன்ஷிப்தான். இந்த போட்டியில் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு நான் தயாராகியிருக்கிறேன்' என்றார்.
    2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 56 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று வெண்கலம் வென்ற சிவ தாபா, இந்த முறை லைட்வெயிட் 60 கிலோ எடைப் பிரிவில் களமிறங்குகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai