Enable Javscript for better performance
தோனி, புவனேஸ்வர் குமார் அபாரம்; தோல்வியிலிருந்து தப்பியது இந்தியா- Dinamani

சுடச்சுட

    

    தோனி, புவனேஸ்வர் குமார் அபாரம்; தோல்வியிலிருந்து தப்பியது இந்தியா

    By DIN  |   Published on : 25th August 2017 02:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    phuvaneskumar

    இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.
    ஒரு கட்டத்தில் இந்திய அணி 21.5 ஓவர்களில் 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் இந்தியா தோற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த தோனியும், புவனேஸ்குமாரும் அபாரமாக ஆடி வெற்றி தேடித்தந்தனர். இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்தது. இதுதான் 8-ஆவது விக்கெட்டுக்கு இந்தியா எடுத்த அதிகபட்ச ரன். புவனேஸ்வர் குமார் 80 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53, தோனி 68 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    இலங்கையின் பல்லகெலே நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணியில் டிக்வெல்லா-
    குணதிலகா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவர்களில் 41 ரன்கள் சேர்த்தது. டிக்வெல்லா 24 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து பூம்ரா பந்துவீச்சில் தவனிடம் கேட்ச் ஆனார்.
    இதையடுத்து குணதிலகாவுடன் இணைந்தார் குஷல் மென்டிஸ். இலங்கை அணி 14.1 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்திருந்தபோது குணதிலகா 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு கேப்டன் உபுல் தரங்கா 9 ரன்களில் நடையைக் கட்ட, குஷல் மென்டிஸ் 19, மேத்யூஸ் 20 ரன்களில் வெளியேறினர். இதனால் 28.3 ஓவர்களில் 121 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது இலங்கை.
    இதையடுத்து 6-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த மிலிந்தா சிறிவர்த்தனா-கபுகேதரா ஜோடி சிறப்பாக ஆட, இலங்கை அணி மோசமான நிலையில் இருந்து மீண்டது. சிறிவர்த்தனா 49 பந்துகளில் அரை சதமடிக்க, 43 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது இலங்கை.
    அந்த அணி 45 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்திருந்தபோது சிறிவர்த்தனாவின் விக்கெட்டை இழந்தது. அவர் 58 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சேர்த்து பூம்ரா பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனார். இந்த ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தது.
    இதன்பிறகு கபுகேதரா 40, தனஞ்ஜெயா 9 ரன்களில் நடையைக் கட்ட, இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்தது.
    இந்தியத் தரப்பில் ஜஸ்பிரித் பூம்ரா 4 விக்கெட்டுகளையும், யுவேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
    சிறப்பான தொடக்கம்: இந்தியா பேட் செய்வதற்கு முன்பு மழை பெய்தது. இதன்காரணமாக டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு 47 ஓவர்களில் 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. இந்திய அணியில் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தியது. ரோஹித் சர்மா அதிரடியாக ரன் சேர்க்க, 10 ஓவர்களில் 64 ரன்களை எட்டியது இந்தியா. தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 43 பந்துகளில் அரை சதமடிக்க, 15 ஓவர்களில் 102 ரன்களை எட்டியது இந்தியா.
    தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 45 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்து தனஞ்ஜெயா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா-தவன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 15.3 ஓவர்களில் 109 ரன்கள் குவித்தது.
    சரிவுக்குள்ளான இந்தியா: இதன்பிறகு இந்தியாவின் சரிவு தவிர்க்க முடியாததானது. ஷிகர் தவன் 50 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
    இதையடுத்து கே.எல்.ராகுலுடன் இணைந்தார் கேதார் ஜாதவ். 18-ஆவது ஓவரை வீசிய தனஞ்ஜெயா, முதல் பந்தில் கேதார் ஜாதவையும் (1), 3-ஆவது பந்தில் கேப்டன் விராட் கோலியையும் (4), 5-ஆவது பந்தில் கே.எல்.ராகுலையும் (4) போல்டாக்கினார். பின்னர் வந்த ஹார்திக் பாண்டியா ரன் ஏதுமின்றியும், அக்ஷர் படேல் 6 ரன்களிலும் நடையைக் கட்ட, 21.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.
    தோனி-புவனேஸ்வர் அபாரம்: இதையடுத்து எம்.எஸ்.தோனியுடன் இணைந்தார் புவனேஸ்வர் குமார். இந்த ஜோடி அசத்தலாக ஆட, இந்தியா சரிவிலிருந்து மீண்டது. அசத்தலாக ஆடிய புவனேஸ்வர் குமார் 77 பந்துகளில் அரை சதமடிக்க, இந்தியா 44.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. புவனேஸ்வர் குமார் 53, தோனி 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கைத் தரப்பில் தனஞ்ஜெயா 10 ஓவர்களில் 54 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
    5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3-ஆவது ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை பல்லகெலேவில் நடைபெறுகிறது.
    சங்ககாராவின் சாதனையை சமன் செய்த தோனி!
    இலங்கை வீரர் குணதிலகாவை ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் இந்திய விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி. இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிகமுறை (99 முறை) ஸ்டெம்பிங் மூலம் எதிரணியினரை ஆட்டமிழக்கச் செய்த முன்னாள் இலங்கை கேப்டன் குமார் சங்ககாராவின் சாதனையை சமன் செய்தார் தோனி. குமார் சங்ககாரா 404 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 99 ஸ்டெம்பிங்குகளை செய்துள்ளார். ஆனால் தோனி இதுவரை 298 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai