Enable Javscript for better performance
2-ஆவது ஒரு நாள் ஆட்டம்: இலங்கை 236 ரன்கள் சேர்ப்பு- Dinamani

சுடச்சுட

    
    jadav

    கேதார் ஜாதவ், கோலி, ராகுல் ஆகியோரை ஒரே ஓவரில் வீழ்த்திய தனஞ்ஜெயாவைப் பாராட்டும் சகவீரர்கள்.

    இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்தது.
    இலங்கையின் பல்லகெலே நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார்.
    இதையடுத்து பேட் செய்த இலங்கை அணியில் டிக்வெல்லா-குணதிலகா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவர்களில் 41 ரன்கள் சேர்த்தது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய டிக்வெல்லா 24 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சேர்த்த நிலையில் பூம்ரா பந்துவீச்சில் தவனிடம் கேட்ச் ஆனார்.
    இதையடுத்து குணதிலகாவுடன் இணைந்தார் குஷல் மென்டிஸ். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 29 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி 14.1 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்திருந்தபோது குணதிலகாவின் விக்கெட்டை இழந்தது. அவர் 37 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்தார்.
    இதன்பிறகு களமிறங்கிய இலங்கை கேப்டன் உபுல் தரங்கா 9 ரன்களில் நடையைக் கட்ட, மறுமுனையில் தடுப்பாட்டம் ஆடிய குஷல் மென்டிஸ் 48 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து சாஹல் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மேத்யூஸ் 20 ரன்களில் வெளியேற, 28.3 ஓவர்களில் 121 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது இலங்கை.
    இதையடுத்து 6-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த மிலிந்தா சிறிவர்த்தனா-கபுகேதரா ஜோடி சிறப்பாக ஆட, இலங்கை அணி மிக மோசமான நிலையில் இருந்து மீண்டது. வேகமாக ரன் சேர்த்த சிறிவர்த்தனா 49 பந்துகளில் அரை சதமடிக்க, 43 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது இலங்கை.
    அந்த அணி 45 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்திருந்தபோது சிறிவர்த்தனாவின் விக்கெட்டை இழந்தது. அவர் 58 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சேர்த்து பூம்ரா பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனார். இந்த ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தது.
    இதன்பிறகு கபுகேதரா 61 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சேர்த்த நிலையில் பூம்ரா பந்துவீச்சில் போல்டு ஆனார். பின்னர் வந்த தனஞ்ஜெயா 9 ரன்களில் நடையைக் கட்ட, இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்தது. சமீரா 6, பெர்னாண்டோ 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    இந்தியத் தரப்பில் ஜஸ்பிரித் பூம்ரா 4 விக்கெட்டுகளையும், யுவேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
    சிறப்பான தொடக்கம்: இந்தியா பேட் செய்வதற்கு முன்பு மழை பெய்தது. இதன்காரணமாக டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு 47 ஓவர்களில் 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தியது. ஒருபுறம் ஷிகர் தவன் நிதானமாக ஆட, மறுமுனையில் ரோஹித் சர்மா அதிரடியாக ரன் சேர்த்தார். இதனால் 10 ஓவர்களில் 64 ரன்களை எட்டியது இந்தியா. தொடர்ந்து அதிரடியாக ரோஹித் சர்மா 43 பந்துகளில் அரை சதமடிக்க, 15 ஓவர்களில் 102 ரன்களை எட்டியது இந்தியா.
    தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 45 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்து தனஞ்ஜெயா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா-தவன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 15.3 ஓவர்களில் 109 ரன்கள் குவித்தது.
    சரிவுக்குள்ளான இந்தியா: இதன்பிறகு இந்தியாவின் சரிவு தவிர்க்க முடியாததானது. ஷிகர் தவன் 50 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
    இதையடுத்து கே.எல்.ராகுலுடன் இணைந்தார் கேதார் ஜாதவ். 18-ஆவது ஓவரை வீசிய தனஞ்ஜெயா, முதல் பந்தில் கேதார் ஜாதவையும் (1), 3-ஆவது பந்தில் கேப்டன் விராட் கோலியையும் (4), 5-ஆவது பந்தில் கே.எல்.ராகுலையும் (4) போல்டாக்கினார். இது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. பின்னர் வந்த ஹார்திக் பாண்டியா ரன் ஏதுமின்றியும், அக்ஷர் படேல் 6 ரன்களிலும் நடையைக் கட்ட, 21.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.
    இதையடுத்து விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனியுடன் இணைந்தார் புவனேஸ்வர் குமார். இந்த ஜோடி இந்தியாவை தோல்வியிலிருந்து மீட்க போராடியது. இந்தியா 34.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. தோனி 29, புவனேஸ்வர் குமார் 13 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai