Enable Javscript for better performance
இன்று 3-ஆவது ஒரு நாள் ஆட்டம்:தொடரை வெல்லுமா இந்தியா?- Dinamani

சுடச்சுட

  
  spt3

  இந்தியா-இலங்கை இடையிலான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கையின் பல்லகெலேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

  முதல் இரு ஆட்டங்களில் வென்றுள்ள இந்திய அணி, 3-ஆவது ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளது. இலங்கை அணியோ தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
  இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. ரோஹித் சர்மா-ஷிகர் தவன் ஜோடி இந்த ஆட்டத்திலும் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் கோலி, கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி, கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டியா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
  கடந்த ஆட்டத்தைப் போலவே இந்த ஆட்டத்திலும் கேப்டன் கோலி 5-ஆவது வீரராகவே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 மற்றும் 4-ஆவது இடங்களில் முறையே கே.எல்.ராகுல், கேதார் ஜாதவ் ஆகியோர் களமிறக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  கடந்த ஆட்டத்தில் இந்தியாவின் மிடில் ஆர்டரை ஆட்டம் காண வைத்தார் இலங்கை வீரர் தனஞ்ஜெயா. எனவே அவருடைய பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் கவனமாக கையாள்வது அவசியமாகும். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், பாண்டியா கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் அக்ஷர் படேல், யுவேந்திர சாஹல் கூட்டணியும் பலம் சேர்க்கிறது.
  இலங்கை அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் உபுல் தரங்காவுக்கு இரு ஆட்டங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அந்த அணி கபுகேதரா தலைமையில் களமிறங்குகிறது. கேப்டன் தரங்காவுக்குப் பதிலாக தினேஷ் சன்டிமல் இடம்பெறுகிறார். காயம் காரணமாக விலகியுள்ள குணதிலகாவுக்குப் பதிலாக லஹிரு திரிமானி களமிறங்குகிறார்.
  மிரட்டும் தனஞ்ஜெயா: இலங்கை அணியில் நிரோஷன் டிக்வெல்லா, குஷல் மென்டிஸ், தினேஷ் சன்டிமல், மேத்யூஸ், திரிமானி, கபுகேதரா போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், டிக்வெல்லா, குஷல் மென்டிஸ் தவிர வேறு யாரும் தொடர்ச்சியாக ரன் குவிக்காதது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய தினேஷ் சன்டிமல் இந்த ஆட்டத்தில் ரன் குவிக்க முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குணதிலகாவுக்குப் பதிலாக களமிறங்கும் திரிமானியும் ஓரளவு சிறப்பாக ஆடுவார் என நம்பலாம்.
  வேகப்பந்து வீச்சில் லசித் மலிங்கா, விஸ்வா பெர்னாண்டோ கூட்டணியை நம்பியுள்ளது இலங்கை. ஆனால் இவர்களின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. அதேநேரத்தில் கடந்த ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலைய வைத்த சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  இந்தியா (உத்தேச லெவன்): ரோஹித் சர்மா, ஷிகர் தவன், கே.எல்.ராகுல், கேதார் ஜாதவ், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், யுவேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா.
  இலங்கை (உத்தேச லெவன்): நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), லஹிரு திரிமானி, குஷல் மென்டிஸ், தினேஷ் சன்டிமல், ஏஞ்செலோ மேத்யூஸ், சமரா கபுகேதரா (கேப்டன்), மிலின்டா சிறிவர்த்தனா, அகிலா தனஞ்ஜெயா, துஷ்மந்தா சமீரா, விஸ்வா பெர்னாண்டோ, லசித் மலிங்கா.
  மிரட்டும் மழை: பல்லகெலேவில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால் கடந்த ஆட்டத்தைப் போலவே இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


  உலகக் கோப்பை போட்டி வரையிலான அடுத்த 18 மாதங்கள் இந்திய வீரர்கள் பரிசோதனை அடிப்படையில் களமிறக்கப்படுவார்கள் என்பது இந்தத் தொடருக்கு முன்னதாகவே எங்கள் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு வீரருடைய திறமையையும் வெளிக்கொண்டு வரும் வகையிலும், நல்ல அனுபவம் கிடைப்பதற்காகவும் அவர்களை வரிசை மாற்றி களமிறக்க
  முயற்சிப்போம்.

  -ஸ்ரீதர், இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர்.

   

  இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம் ஆகும். கேப்டனாக களமிறங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கடந்த காலத்தைப் பற்றி நான் நினைப்பதில்லை. நாளை என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே நான் சிந்திக்கிறேன்.

  -கபுகேதரா, இலங்கை கேப்டன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai