Enable Javscript for better performance
தோனியின் அறிவுரையால் சிறப்பாக ஆடினேன்:புவனேஸ்வர் குமார்- Dinamani

சுடச்சுட

  

  தோனியின் அறிவுரையால் சிறப்பாக ஆடினேன்: புவனேஸ்வர் குமார்

  By DIN  |   Published on : 26th August 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  puvaneskumar

  டெஸ்ட் போட்டியில் ஆடுவது போன்று விளையாடுமாறு விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி எனக்கு அறிவுரை வழங்கினார். அதுதான் நான் சிறப்பாக விளையாட உதவியது என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார். 
  பல்லகெலே நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. 
  ஒரு கட்டத்தில் இந்திய அணி 21.5 ஓவர்களில் 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் இந்தியா தோற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த தோனியும், புவனேஸ்வர் குமாரும் அபாரமாக ஆடி வெற்றி தேடித்தந்தனர். இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்தது. புவனேஸ்வர் குமார் 80 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53, தோனி 68 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
  இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த புவனேஸ்வர் குமார் கூறியதாவது: நான் பேட் செய்வதற்கு களமிறங்கியபோது, டெஸ்ட் போட்டியில் நான் விளையாடக்கூடிய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு தோனி என்னிடம் கூறினார். மேலும், ஏராளமான ஓவர்கள் இருப்பதால், எவ்வித பதற்றமும் இன்றி விளையாடுமாறு தோனி கூறினார். 
  நிதானமாக ஆடி இலங்கை பந்துவீச்சாளர்களை திணறவைத்துவிட்டால், எளிதாக இலக்கை எட்ட முடியும் என எங்களுக்குத் தெரியும். நான் பேட் செய்ய வந்தபோது, ஏற்கெனவே 7 விக்கெட்டுகளை இழந்திருந்தோம். அப்போது இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்பது எனக்குத் தெரியும். அதனால் நிதானமாக ஆடலாம். முடிந்த அளவுக்கு தோனிக்கு உதவும் வகையில் விளையாடுவோம் என நினைத்தேன். அதை மட்டுமே நான் முயற்சித்தேன்.
  எங்கள் அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். அதன்பிறகு திடீரென 4 விக்கெட்டுகளை இழந்ததால் நாங்கள் பதற்றமான சூழலுக்கு தள்ளப்பட்டோம். நான் கடைசி வரை களத்தில் நிற்க வேண்டும் என்றுதான் இந்திய அணி விரும்பியது. நானும் அதையே செய்ய நினைத்தேன். 47 ஓவர்கள் வரை களத்தில் நின்றால் மட்டுமே வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதுதான் எனது திட்டமாகவும் இருந்தது என்றார்.
  இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தனஞ்ஜெயாவை எப்படி சமாளித்தீர்கள் என புவனேஸ்வர் குமாரிடம் கேட்டபோது, 'அவரை சமாளிக்க சில திட்டங்களை வைத்திருந்தேன். அவர் ஆப் ஸ்பின்னர் என்றாலும்கூட, லெக் ஸ்பின் மற்றும் கூக்ளியை வீசினார். அது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் துல்லியமாக வீசாத பந்துகளில் ரன் சேர்த்தேன். அதேநேரத்தில் எனது உடலுக்கு வெளியே சென்ற பந்துகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. 
  ஆரம்பத்தில் அவர் என்ன மாதிரியான பந்தை வீசுகிறார் என்பதை கணிப்பது கடினமாக இருந்தது. ஆனால் 10 முதல் 15 பந்துகள் வரை எதிர்கொண்ட பிறகு அவர் என்ன மாதிரியான பந்தை வீசப் போகிறார் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டேன்' என்றார்.
  ஒரு நாள் போட்டியில் முதல்முறையாக அரை சதமடித்துள்ளார் புவனேஸ்வர் குமார். கடந்த 8 ஆண்டுகளில் ஒரு நாள் போட்டியில் 9-ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கி அரை சதமடித்த முதல் இந்தியர் புவனேஸ்வர் குமார்தான். அது குறித்துப் பேசிய அவர், 'ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அரை சதமடிப்பேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. ஒரு நாள் போட்டி எனது பேட்டிங்கிற்கு ஏற்றதல்ல. ஏனெனில் நான் பிரமாண்ட சிக்ஸர்களை விளாசக்கூடிய பேட்ஸ்மேன் அல்ல. ஆனால் இப்போது அரை சதமடித்ததோடு, போட்டியையும் வென்று தந்திருக்கிறேன்' என்றார்.

  வென்றிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன்
  இந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட்டுகளை 
  வீழ்த்தியது மனநிறைவு அளிக்கிறது. எனினும் அதில் வென்றிருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்று இலங்கை சுழற்பந்து வீச்சாளர் 
  தனஞ்ஜெயா தெரிவித்தார்.
  ஒரே ஓவரில் கேதார் ஜாதவ், கோலி, ராகுல் ஆகியோரை வீழ்த்தி இந்தியாவை நிலைகுலையச் செய்த தனஞ்ஜெயா ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் 
  சென்றார். அதன்பிறகு அவர் கூறியதாவது:
  இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற முடியாமல் போனது வருத்தமாக இருந்தது. அந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் மிகுந்த 
  மகிழ்ச்சியடைந்திருப்பேன். இந்தியாவுக்கு எதிராக என்னுடைய ஆப் ஸ்பின் எடுபடாததை உணர்ந்தபோது, லெக் ஸ்பின் மற்றும் கூக்ளியை வீசுவது என்று முடிவு செய்தேன். எங்களுடைய இலக்கு தற்காப்பு ஆட்டம் அல்ல. அதனால்தான் பல்வேறு வகையான பந்துவீச்சை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது என்றார்.
  பேட்டிங்கில் மாற்றம் செய்ததில் வருத்தம் இல்லை
  பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ததில் எந்த வருத்தமும் இல்லை என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
  இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் கோலி இடத்தில் கேதார் ஜாதவ் களமிறக்கப்பட்டார். கோலி 5-ஆவது வீரராக களமிறங்கினார். 
  ஜாதவ், ராகுல், கோலி ஆகியோர் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா கடும் சரிவுக்குள்ளானது. 
  இது தொடர்பாக கோலி கூறியதாவது: வெற்றி இலக்கு 231 
  ரன்கள்தான். ஒரு கட்டத்தில் நாங்கள் ஒரு விக்கெட் இழப்புக்கு 110
  ரன்கள் எடுத்திருந்தோம். அதனால் எளிதாக வெற்றி பெற முடியும் 
  என நினைத்து மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் 
  பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்தேன். அதில் எந்த வருத்தமும் இல்லை. நானே 3-ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கியிருந்தால்கூட, நிச்சயம் அந்த பந்தில் போல்டாகியிருப்பேன். ஏனெனில் 
  தனஞ்ஜெயா சிறப்பாக பந்துவீசினார் என்றார். 


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai