Enable Javscript for better performance
புரோ கபடி: தமிழ் தலைவாஸூக்கு 4-ஆவது தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 35-24 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியைத் தோற்கடித்தது.
    பாட்னா பைரேட்ஸ் அணிக்கு இது 4-ஆவது வெற்றியாகும். அதேநேரத்தில் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 4-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.
    மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் முதல் புள்ளியை டேக்கிள் மூலமே பெற்றன. தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்குர் தனது ரைடின் மூலம் முதல் புள்ளியைக் கைப்பற்ற, அந்த அணி 4-ஆவது நிமிடத்தில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
    அதேநேரத்தில் மறுமுனையில் போராடிய பாட்னா பைரேட்ஸ் அணி, 16-ஆவது நிமிடத்தில்தான் ரைடின் மூலம் முதல் புள்ளியைப் பெற்றது. அந்த அணியின் வினோத் குமார் இந்த புள்ளியைப் பெற்றுத் தந்தார். இதன்மூலம் ஸ்கோரையும் சமன் (8-8) செய்தது பாட்னா.
    இதன்பிறகு பிரதீப் நர்வால் அபாரமாக ஆட, 19-ஆவது நிமிடத்தில் பாட்னா 11-8 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 20-ஆவது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணியை ஆல் அவுட்டாக்கிய பாட்னா அணி, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 16-9 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
    பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய பாட்னா அணி, 27-ஆவது நிமிடத்தில் 20-13 என்ற வலுவான நிலையை எட்டியது.
    இதன்பிறகு 32-ஆவது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணியை இரண்டாவது முறையாக ஆல் அவுட்டாக்கிய பாட்னா அணி, 32-18 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து அபாரமாக ஆடிய பாட்னா அணி 35-24 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியைத் தோற்கடித்தது.
    பாட்னா தரப்பில் மானு கோயத் 11 புள்ளிகளைக் கைப்பற்றினார். அந்த அணியின் பின்கள வீரர் ஜெய்தீப் தனது டேக்கிள் மூலம் 5 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார்.
    அதேநேரத்தில் தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்குர் தனது அபார ரைடின் மூலம் 10 புள்ளிகளைக் கைப்பற்றினார். எனினும் அவரால் தனது அணியை தோல்வியில் இருந்து மீட்க முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai