சாய்னா, சிந்து விளையாடவுள்ள உலக சாம்பியன்ஷிப் அரையிறுதி ஆட்டங்கள் எப்போது தொடங்கும்?

அவருக்கு முன்பு ஆடப்படும் 4 நான்கு ஆட்டங்களும் சீக்கிரமாக முடிந்தால் மாலை 6.30 மணிக்கு முன்பே...
சாய்னா, சிந்து விளையாடவுள்ள உலக சாம்பியன்ஷிப் அரையிறுதி ஆட்டங்கள் எப்போது தொடங்கும்?

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்கள். இதன்மூலம் இருவரும் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்கள்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் சிந்து 21-14, 21-9 என்ற நேர் செட்களில் சீனாவின் சன் யூவை வீழ்த்தினார். இதில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய சிந்து, 39 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். சிந்து தனது அரையிறுதியில் மற்றொரு சீன வீராங்கனையான சென் யூஃபெய்யை சந்திக்கிறார். சிந்து ஏற்கெனவே இரு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மரை 21-19, 19-21, 21-15 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். சாய்னா தனது அரையிறுதியில் ஜப்பானின் ஒஹுஹுராவைச் சந்திக்கிறார்.

இரு அரையிறுதி ஆட்டங்களும் இன்று நடைபெறவுள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் சிந்து இறுதிச்சுற்றில் விளையாடினார். அதை ஒட்டுமொத்த இந்தியாவும் கண்டுகளித்தது. சிந்து அப்போட்டியில் தோற்றாலும் இந்தியர்கள் அதிகளவில் பார்த்த பாட்மிண்டன் போட்டி என்கிற சாதனையைப் படைத்தது. அதன்பிறகு இன்று நடைபெறவுள்ள இந்த இரு ஆட்டங்கள் மீதும் ரசிகர்களுக்கு ஆர்வம் எழுந்துள்ளது. 

ஸ்காட்லாந்து நேரப்படி காலை 10 மணி மாலை 3 மணி வரை ஒரு பகுதியாகவும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை என இரு பகுதிகளாக இன்றைய போட்டிகள் நடைபெறவுள்ளன. 

அதாவது இந்திய நேரப்படி மதியம் 2.30 மணி முதல் இன்றைய உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 5-வது போட்டியாக சாய்னா - ஒஹுஹுரா இடையேயான முதல் அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொரு பாட்மிண்டன் போட்டிகளும் வழக்கமாக முக்கால் மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நடைபெறும். மிக சுலபமான போட்டிகள் அரை மணி நேரத்தில் முடிவு பெறும். 

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதி ஆட்டங்கள் என்பதால் ஒவ்வொரு போட்டியும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடைபெறும் என வைத்துக்கொண்டால் சாய்னாவின் போட்டி எப்படியும் மாலை 6.30 அல்லது இரவு 7 மணிக்கு ஆரம்பமாக வாய்ப்புண்டு. அவருக்கு முன்பு ஆடப்படும் 4 நான்கு ஆட்டங்களும் சீக்கிரமாக முடிந்தால் மாலை 6.30 மணிக்கு முன்பே தொடங்கவும் வாய்ப்புண்டு.  

இன்றைய நாளின் கடைசி ஆட்டமாக 10வது போட்டியில் மற்றொரு அரையிறுதியில் சிந்துவும் சென் யூஃபெய்யும் மோதுகிறார்கள். அட்டவணைப்படி 6-வது போட்டி இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்குத்தான் ஆரம்பமாகும். அதற்குப் பல மணி நேரங்களுக்கு முன்பு முதல் 5 போட்டிகளும் முடிவுற்றாலும் இந்த நேரத்தில் மட்டும் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் பார்த்தாலும் சிந்துவின் போட்டி ஆரம்பமாக எப்படியும் இரவு 11.30 மணி ஆகிவிடவும் வாய்ப்புண்டு. அவருக்கு முன்பு ஆடப்படும் 4 நான்கு ஆட்டங்களும் சீக்கிரமாக முடிந்தால் இரவு 11.30 மணிக்கு முன்பே தொடங்கவும் வாய்ப்புண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com