Enable Javscript for better performance
உலக குத்துச்சண்டை: காலிறுதியில் கெளரவ், அமித்- Dinamani

சுடச்சுட

    

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கெளரவ் பிதுரி (56 கிலோ), அமித் பாங்கல் (49 கிலோ) ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    அதேநேரத்தில் சிவ தாபா உணவு பிரச்னை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். மற்றொரு முன்னணி வீரரான மனோஜ் குமார் (69 கிலோ) தனது முதல் ஆட்டத்தில் தோற்று வெளியேறினார்.
    ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் கெளரவ் பிதுரி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உக்ரைனின் மிக்கோலா பட்சென்கோவை தோற்கடித்தார். கெளரவ் பிதுரி தனது காலிறுதியில் டுனீசியாவின் பிலெல் மெகதியை சந்திக்கிறார்.
    மற்றொரு இந்தியரான அமித் பாங்கல் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருந்த ஈகுவடாரின் கார்லோஸ் குய்போவை வீழ்த்தினார். அடுத்ததாக போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் உஸ்பெகிஸ்தானின் ஹசன்பாய் துஸ்மடோவை சந்திக்கிறார் அமித் பாங்கல்.
    போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த சிவ தாபா லைட்வெயிட் 60 கிலோ எடைப் பிரிவில் நேரடியாக 2-ஆவது சுற்றில் களமிறங்க தகுதி பெற்றிருந்தார். ஆனால் உணவு பிரச்னை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக அவர் போட்டியிலிருந்து வெளியேற நேரிட்டது. சிவ தாபா, கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    69 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற மனோஜ் குமார் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெனிசூலாவின் காபிரியேல் பெரஸ்ஸிடம் தோல்வி கண்டார். இந்தியாவின் மற்றொரு முன்னணி வீரரான விகாஷ் கிருஷ்ணன் (75 கிலோ) தனது 2-ஆவது சுற்றில் இங்கிலாந்தின் பெஞ்சமின் விட்டாகரிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai