சுடச்சுட

  
  Sindhu

  ஆட்டத்தின் கடைசி நிமிடம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது என இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்தார்.

  ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிந்து 19-21, 22-20, 20-22 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வி கண்டார். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரான சிந்து, நஜோமியை எளிதாக வீழ்த்தி தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3-ஆவது செட்டில் கடுமையாகப் போராடிய சிந்து, நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார்.
  இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிந்து, மேலும் கூறியதாவது: தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் போனது மிகுந்த வருத்தமளிக்கிறது. 3-ஆவது செட்டில் 20-20 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும்போது எல்லோருமே தங்கப் பதக்கம் வெல்வதற்கு தீவிரம் காட்டுவார்கள். நானும் தங்கம் வெல்லும் வாய்ப்பை நெருங்கியிருந்தேன். ஆனால் கடைசி நிமிடம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.
  நஜோமியும் எளிதில் வீழ்த்தக்கூடிய வீராங்கனை அல்ல. நாங்கள் இருவரும் மோதுகிறபோதெல்லாம் ஆட்டம் மிகுந்த சவால் மிக்கதாவே இருந்திருக்கிறது. நான் நஜோமியை ஒருபோதும் எளிதாக எடுத்துக்கொண்டதில்லை.
  சவால் மிக்க இறுதி ஆட்டத்துக்காக நான் சிறப்பாக தயாராகியிருந்தாலும், இந்த நாள் என்னுடைய நாளாக இல்லை. இந்த ஆட்டம் ஏறக்குறைய ஒரு மணி, 49 நிமிடங்கள் நடைபெற்றது. இதுபோன்ற ஆட்டங்கள் உடலளவிலும், மனதளவிலும் கடினமானதாகும்.
  இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நான் வெள்ளி வென்றிருக்கிறேன். சாய்னா வெண்கலம் வென்றிருக்கிறார். அதற்காக இந்தியர்களாகிய நாங்கள் பெருமை கொள்கிறோம். நாட்டுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. எதிர்காலத்தில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஏராளமான பதக்கங்களை வெல்வேன் என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai