சுடச்சுட

    

    யுஎஸ் ஓபன்: ஷரபோவா, வீனஸ் வில்லியம்ஸுக்கு முதல் வெற்றி

    By DIN  |   Published on : 30th August 2017 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    us-open

    சைமோனாவுக்கு பந்தை சர்வீஸ் செய்யும் ஷரபோவா.

    அமெரிக்காவில் நடைபெற்று வரும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மரியா ஷரபோவா, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
    ஊக்கமருந்து புகாரில் விதிக்கப்பட்ட தடைக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஷரபோவா பங்கேற்பது இது முதல் முறையாகும். ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான இதில், ஷரபோவா தனது முதல் சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப்பை சந்தித்தார்.
    இருவருக்கும் இடையே 2 மணி நேரம் 45 நிமிடங்கள் விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் ஷரபோவா 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டை கைப்பற்றிய ஷரபோவா உணர்ச்சிவயப்பட்டு கண்ணீர் சிந்தினார். ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்து, நன்றி தெரிவித்தார். ஷரபோவா தனது 2-ஆவது சுற்றில் ஹங்கேரியின் டிமியா பாபோஸை சந்திக்கிறார்.
    கடந்த 2016 ஆஸ்திரேலிய ஓபனின் காலிறுதியில் செரீனா வில்லியம்ஸுக்கு எதிராக தோல்வி அடைந்த ஆட்டமே, ஷரபோவா கடைசியாக ஆடிய கிராண்ட்ஸ்லாம் போட்டியாகும்.
    யுஎஸ் ஓபனில் 20 ஆண்டுகள்: இந்நிலையில், மற்றொரு முதல் சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்லோவேகியாவின் விக்டோரியா குஸ்மோவாவை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அவர் தனது 2-ஆவது சுற்றில் பிரான்ஸின் ஒஷன் டோடினை எதிர்கொள்கிறார்.
    வீனஸ் வில்லியம்ஸ், யுஎஸ் ஓபன் டென்னிஸில் பங்கேற்பது இது 20-ஆவது ஆண்டாகும். அவர் கடந்த 1997-ஆம் ஆண்டு தனது 17-ஆவது வயதில் முதல் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் ஆட்டத்தில் லாத்வியாவின் லாரிஸா நீலண்டை 5-7, 6-0, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். யுஎஸ் ஓபனில் கடந்த 2000 மற்றும் 2001-ஆம் ஆண்டுகளில் வீனஸ் பட்டம் வென்றுள்ளார்.
    இதுகுறித்து வீனஸ் கூறுகையில், 'இந்த 20 ஆண்டுகளும் அற்புதமானவை. இத்தனை ஆண்டுகள் தொடர்வேன் என்று நான் உறுதியாக நம்பவில்லை' என்றார்.
    இதனிடையே, இதர முதல் சுற்றுகளில் ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவா 6-7(7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான ஜானா செபலோவாவை வீழ்த்தினார். டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-1, 7-5 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் மிஹேலா புஸார்னெஸ்குவை வீழ்த்தினார்.
    ஸ்வெரேவ் வெற்றி: இதனிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் 7-6(9), 7-5, 6-4 என்ற செட் கணக்கில் பார்படோஸின் டேரியன் கிங்கை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
    போட்டித் தரவரிசையில் 17-ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் சாம் கெர்ரி 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கில்லெஸ் சைமனை வீழ்த்தினார்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai