சுடச்சுட

  

  விளையாட்டு வீரர்களுக்கு கேல் ரத்னா, அர்ஜுனா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

  By DIN  |   Published on : 30th August 2017 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mariappan

  தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது வழங்குகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த

  2017-ஆம் ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை பாரா தடகள வீரர் தேவேந்திர ஜஜ்ஜாரியாவும், அர்ஜுனா விருதை தமிழக பாரா தடகள வீரர் தங்கமாரியப்பனும் செவ்வாய்க்கிழமை பெற்றனர்.
  இவர்கள் உள்ளிட்டோருக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
  2017-ஆம் ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா, அர்ஜுனா, தயான்சந்த் விருதுகள் பெறுவோர் பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் கடந்த 22-ஆம் தேதி வெளியிட்டது.
  இந்நிலையில், தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கான விருது மற்றும் பட்டயத்தை வழங்கினார்.
  ராஜீவ்காந்தி கேல் ரத்னா: இதில், இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பாரா தடகள வீரர் தேவேந்திர ஜஜ்ஜாரியாவுக்கும், இந்திய ஹாக்கி அணி வீரர் சர்தார் சிங்குக்கும் வழங்கப்பட்டது.
  கேல் ரத்னா விருது பெறும் முதல் பாரா தடகள வீரர் ஜஜ்ஜாரியா என்பது குறிப்பிடத்தக்கது. அவர், 2004-ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக், 2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
  அதேபோல், கேல் ரத்னா விருது பெறும் 2-ஆவது ஹாக்கி வீரர் சர்தார் சிங் ஆவார். சர்வதேச ஹாக்கி போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு, நடுகள வீரரான சர்தாரின் பங்களிப்பை பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
  மாரியப்பனுக்கு அர்ஜுனா: நிகழ்ச்சியில், ரியோ பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜுனா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ் மற்றும் டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜ் ஆகியோருக்கும் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
  அவர்களுடன், வி.ஜே.சுரேகா (வில் வித்தை), குஷ்பீர் கெளர் (தடகளம்), பிரசாந்தி சிங் (கூடைப்பந்து), லைஷ்ராம் தேவேந்திர சிங் (குத்துச்சண்டை), சேதேஷ்வர் புஜாரா (கிரிக்கெட்), ஹர்மன்பிரீத் கெளர் (கிரிக்கெட்), ஒய்னம் பெம்பெம் தேவி (கால்பந்து), எஸ்.எஸ்.பி.செளராஸியா (கோல்ஃப்), எஸ்.வி.சுனில் (ஹாக்கி), ஜஸ்வீர் சிங் (கபடி), பி.என்.பிரகாஷ் (துப்பாக்கி சுடுதல்), சாகேத் மைனேனி (டென்னிஸ்), சத்யவர்த் கடியான் (மல்யுத்தம்), வருண் சிங் (பாரா தடகளம்) ஆகியோருக்கும் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
  துரோணாச்சார்யா விருது: இந்த ஆண்டு சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது மறைந்த ஆர்.காந்தி (தடகளம்), ஜி.எஸ்.எஸ்.வி. பிரசாத் (பாட்மிண்டன்), பிரிஜ் பூஷண் மொஹந்தி (குத்துச்சண்டை), பி.ஏ.ரஃபேல் (ஹாக்கி), சஞ்சய் சக்ரவர்த்தி (துப்பாக்கி சுடுதல்), ரோஷண் லால் (மல்யுத்தம்) ஆகிய 6 பேருக்கு வழங்கப்பட்டது.
  இதில் ஆர்.காந்தி காலமாகிவிட்ட நிலையில், எஞ்சிய 5 பேரும் ஒய்வுபெற்றுவிட்டனர். ஓய்வு பெற்றவர்களுக்கான விருது வாழ்நாள் சாதனைக்கானதாக வழங்கப்பட்டது.
  தயான்சந்த் விருது: விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கான தயான்சந்த் விருதை, பூபேந்தர் சிங் (தடகளம்), செய்யது ஷாகித் ஹக்கிம் (கால்பந்து), சுமராய் டெடெ (ஹாக்கி) ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
  பாராட்டு மழையில் மாரியப்பன்
  விருது நிகழ்ச்சியில் மாரியப்பன் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், பங்கேற்பாளர்களின் கரவொலியால் அரங்கம் நிரம்பியது. அவர் தனது இடத்திலிருந்து வந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் விருது பெறும் வரையில் அவருக்கான அந்த பாராட்டு நீடித்தது குறிப்பிடத்தக்கது.
  புஜாரா பங்கேற்கவில்லை
  அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா, கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளதால் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai