சுடச்சுட

    

    அமெரிக்க ஓபன்: நடப்பு சாம்பியன் கெர்பர் அதிர்ச்சித் தோல்வி

    By DIN  |   Published on : 31st August 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    us_open

    ஏஞ்ஜெலிக் கெர்பரை வீழ்த்திய மகிழ்ச்சியில் நயோமி ஒசாக்கா.

    போராடி வென்றார் ஃபெடரர்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் கெர்பர் 3-6, 1-6 என்ற நேர் செட்களில் ஜப்பானின் இளம் வீராங்கனையான நயோமி ஒசாக்காவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார். 
    19 வயதான ஒசாக்கா தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் ஒரு வீராங்கனைக்கு எதிராக முதல் வெற்றியைப் பெற்றுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், 'நான் இந்த பிரமாண்ட மைதானத்துக்குள் நுழைந்தபோது, ரசிகர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். அதனால் சற்று பதற்றமடைந்தேன். எனினும் கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டு தோற்கமாட்டேன் என்று நம்பினேன். கடந்த ஆண்டு இங்கு விளையாடிய அனுபவம் இந்த முறை எனக்கு உதவியது' என்றார்.
    போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் செக்.குடியரசின் கரோலின் பிளிஸ்கோவா 6-2, 6-1 என்ற நேர் செட்களில் போலந்தின் மக்டா லினெட்டேவையும், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-3, 7-6 (6) என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் எல்லிஸ் மெர்டென்ஸை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர். 
    ஃபெடரர் வெற்றி: ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் கடும் போராட்டத்துக்குப் பிறகு 4-6, 6-2, 6-1, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் 19 வயது வீரரான பிரான்செஸ் டியாஃபோவை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி, 17 நிமிடங்கள் நடைபெற்றது.
    வெற்றி குறித்து ரோஜர் ஃபெடரர் கூறுகையில், 'இந்த ஆட்டம் எனக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுக்கும் என நினைக்கிறேன். சில வாரங்களுக்கு முன்பு என்னுடைய முதுகுப் பகுதியில் பிரச்னை ஏற்பட்டது. அதை நினைத்து இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் சற்று கவலைப்பட்டேன். ஆனால் அதை மறந்த பிறகு நான் சிறப்பாக ஆடிவிட்டேன்' என்றார்.
    நடால் வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 7-6 (6), 6-2, 6-2 என்ற நேர் செட்களில் செர்பியாவின் துஸான் லஜோவிச்சை தோற்கடித்தார்.


     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai