புரோ கபடி: ஹரியாணாவை வீழ்த்தியது யு-மும்பா
By DIN | Published on : 31st August 2017 12:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹரியாணா ரைடரை மடக்கிப் பிடிக்கும் யு-மும்பா அணியினர்.
5-ஆவது சீசன் புரோ கபடி போட்டியின் 53-ஆவது ஆட்டத்தில் யு-மும்பா அணி 38-32 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணியைத் தோற்கடித்தது.
மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சிறப்பாக ஆடின. எனினும் முதல் பாதி ஆட்டநேர முடிவில் யு-மும்பா அணி 20-15 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் ஹரியாணா வீரர் விகாஸ் அபாரமாக ஆடியபோதும், அவரால் தனது அணியை சரிவிலிருந்து மீட்க முடியவில்லை. இறுதியில் யு-மும்பா அணி 38-32 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது. யு-மும்பா தரப்பில் கேப்டன் அனுப் குமார் 8 புள்ளிகளையும், ஸ்ரீகாந்த் 6 புள்ளிகளையும் கைப்பற்றினர். ஹரியாணா தரப்பில் விகாஸ் 9 புள்ளிகளைக் கைப்பற்றினார்.
இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள யு-மும்பா அணி 4-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் ஹரியாணா அணிக்கு இது 2-ஆவது தோல்வியாகும்.
இன்றைய ஆட்டங்கள்
தெலுகு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ், நேரம்: இரவு 8
யு-மும்பா-ஜெய்ப்பூர், நேரம்: இரவு 9
இடம்: மும்பை , நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்