சுடச்சுட

    
    banglades

    ஆஸ்திரேலியாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் வங்கதேச அணியினர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது வங்கதேசம். 
    இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் வெற்றியைப் பெற்று வரலாறு படைத்திருக்கிறது வங்கதேசம். 11 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசத்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி தோல்வி கண்டுள்ளது. 
    வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 78.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல்ஹசன் 84, தமிம் இக்பால் 71 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியத் தரப்பில் பட் கம்மின்ஸ், நாதன் லயன், ஆஷ்டன் அகர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
    இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 74.5 ஓவர்களில் 217 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் மட் ரென்ஷா 45, ஆஷ்டன் அகர் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல்ஹசன் 5 விக்கெட்டுகளையும், ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
    இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் 79.3 ஓவர்களில் 221 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தமிம் இக்பால் 78, கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 41 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் லயன் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து 265 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 75, ஸ்டீவன் ஸ்மித் 25 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
    டேவிட் வார்னர் சதம்: 4-ஆவது நாளான புதன்கிழமை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 121 பந்துகளில் சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 19-ஆவது சதம் இது.
    ஆஸ்திரேலியா 41.5 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்திருந்தபோது டேவிட் வார்னர் ஆட்டமிழந்தார். அவர் 135 பந்துகளில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் குவித்து அல்ஹசன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 
    சரிவுக்குள்ளான ஆஸி.: இதன்பிறகு ஆஸ்திரேலியாவின் சரிவு தவிர்க்க முடியாததானது. ஸ்டீவன் ஸ்மித் 37 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 15, மேத்யூ வேட் 4, ஆஷ்டன் அகர் 2, மேக்ஸ்வெல் 14 ரன்களில் நடையைக் கட்டினர். அப்போது 57.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. 
    இதையடுத்து நாதன் லயன் களமிறங்க, மறுமுனையில் பேட் கம்மின்ஸ் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விரட்டி மிரட்டினார். இதனால் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டது. ஆனால் அந்த அணி 66.2 ஓவர்களில் 228 ரன்களை எட்டியபோது நாதன் லயன் (12 ரன்கள்) ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஜோஷ் ஹேஸில்வுட்டை டக் அவுட்டாக்கினார் தைஜுல் இஸ்லாம். 
    இதனால் ஆஸ்திரேலியா 70.5 ஓவர்களில் 244 ரன்களுக்கு சுருண்டது. பேட் கம்மின்ஸ் 55 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 
    வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல்ஹசன் 5 விக்கெட்டுகளையும், தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், ஹசன் மிராஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
    இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 84 ரன்கள் குவித்ததோடு, 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
    இரு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி சிட்டகாங் நகரில் தொடங்குகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai