உலக ஹாக்கி லீக்: இந்தியாவுக்கு முதல் தோல்வி

உலக ஹாக்கி லீக் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.

உலக ஹாக்கி லீக் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.
ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது இங்கிலாந்து. அதன் பலனாக முதல் கோல் வாய்ப்பு அந்த அணிக்கு கிடைத்தது. 
25-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் டேவிட், ஃபீல்டு கோல் ஒன்றை அடித்தார். எஞ்சிய நேரத்தில் இந்தியாவுக்கு கோல் வாய்ப்பு கிடைக்காததால் முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
பிற்பாதியில் இந்தியா கடுமையாக முயற்சித்து வந்த நிலையில், இங்கிலாந்தின் சாம் வார்டு 43-ஆவது நிமிடத்தில் அணியின் கோல் கணக்கை இரட்டிப்பாக்கினார். 
இதனால் இந்தியா 2-0 என பின்தங்கியது. இந்நிலையில் இந்தியாவுக்கான முதல் கோல் 47-ஆவது நிமிடத்தில் கிடைத்தது. அணி வீரர் ஆகாஷ்தீப் சிங், பெனால்டி வாய்ப்பை அற்புதமான கோலாக்கினார்.
இதனால் உத்வேகம் பெற்ற இந்திய அணியில், மூத்த வீரர் ரூபிந்தர் பால் சிங் அடுத்த 3 நிமிடத்தில் ஃபீல்டு கோல் அடிக்க இந்தியா 2-2 என ஆட்டத்தை சமன் செய்தது. இறுதிக்கட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக முயற்சித்தபோதும், இங்கிலாந்துக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் சாம் வார்டு 57-ஆவது நிமிடத்தில் மீண்டும் கோல் அடிக்க 3-2 என இங்கிலாந்து வென்றது.
முன்னதாக, இப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடனான முதல் ஆட்டத்தை சமன் செய்திருந்த நிலையில், தற்போது முதல் தோல்வியை சந்தித்துள்ளது இந்தியா.
இதர ஆட்டங்கள்: இதனிடையே, சனிக்கிழமை நடைபெற்ற இதர ஆட்டங்களில் பெல்ஜியம் 3-2 என்ற கணக்கில் ஆர்ஜென்டீனாவையும், ஸ்பெயின் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தையும் வென்றன. ஆஸ்திரேலியா-ஜெர்மனி இடையேயான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com