தில்லி டெஸ்ட்: இலங்கை அணி மீண்டும் தடுமாற்றம்! வெற்றியை நோக்கி இந்தியா!

4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது...
தில்லி டெஸ்ட்: இலங்கை அணி மீண்டும் தடுமாற்றம்! வெற்றியை நோக்கி இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 410 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

தில்லியில் இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. 127.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது இந்தியா. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை 3-ஆம் நாள் ஆட்டம் முடிவில் இலங்கை 130 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது. சண்டிமல் 147, லக்ஷன் சன்டகன் ரன்கள் இன்றி களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்று சண்டிமல் 164 ரன்களில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 135.3 ஓவர்களில் 373 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியத் தரப்பில் அஸ்வின், இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இதன்பிறகு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 4-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்து 214 ரன்கள் முன்னிலை பெற்றது. தவன் 15, புஜாரா 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். விஜய் 9, ரஹானே 10 ரன்களுடன் ஆட்டமிழந்தார்கள். 

மோசமான காற்றுத் தரம் காரணமாக இலங்கை வீரர் லக்மலுக்கு இன்று மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. 5-வது ஓவரை லக்மல் வீசிய பிறகு அவரால் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. மைதானத்திலேயே அவர் வாந்தி எடுத்தார். இதையடுத்து அவர் மைதானத்திலிருந்து வெளியேறி வீரர்களின் ஓய்வறைக்குச் சென்றார். இலங்கை வீரர்கள் பலரும் முகக்கவசம் அணிந்துகொண்டுதான் தற்போது விளையாடிவருகிறார்கள். பிறகு 10-வது ஓவரின்போது மீண்டும் களமிறங்கிய லக்மல், உடனடியாக தனது பந்துவீச்சைத் தொடர்ந்தார்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி விரைவாக ரன்கள் குவித்தார்கள். அதிலும் புஜாரா மற்ற வீரர்களை விடவும் ரன்கள் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் காண்பித்தார். 5 பவுண்டரிகளுடன் அரை சதத்தை நெருங்கும்போது எதிர்பாராதவிதமாக 49 ரன்களில் டி சில்வா பந்துவீச்சில் வெளியேறினார். தனது பிறந்தநாளை அரை சதம் எடுத்துக் கொண்டாடினார் தவன். அரை சதத்தைக் கடந்தபிறகு விரைவாக ஆடினார். எனினும் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 67  ரன்களில் லக்ஷன் சன்டகன் பந்துவீச்சில் வீழ்ந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த கோலியும் ரோஹித் சர்மாவும் அதே வேகத்தில் ரன் எடுத்தார்கள். அதிலும் ரோஹித் சர்மா ஒருநாள் பாணியில் கடகடவென பவுண்டரிகளை எடுத்தார்.

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. கோலி 25, ரோஹித் சர்மா 28 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 6 விக்கெட் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 355 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

தேநீர் இடைவேளைக்குப் பிறகும் இந்திய அணியின் ரன் வேட்டை தொடர்ந்தது. 3 பவுண்டரிகள் மட்டுமே எடுத்தாலும் 55 பந்துகளில் அரை சதம் எடுத்தார் கோலி. இதன் பின்னர் ஒரு ரன் கூட கூடுதலாகச் சேர்க்கமுடியாமல் 50 ரன்களுடன் ஆட்டமிழந்தார் கோலி. ரோஹித் சர்மா, 5 பவுண்டரிகளுடன் 49 பந்துகளில் அரை சதத்தை எட்டியவுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை 52.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரைச் சமன் செய்ய இலங்கை அணிக்கு 410 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இலங்கை அணியின் 2-வது இன்னிங்ஸில் ஆரம்பம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. ஆறாவது ஓவரில் சதீரா சமரவிக்ரமா 5 ரன்களில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வெளிச்சமின்மையால் ஆட்டம் முடியும் தருணத்தில் ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஜடேஜா. 16-வது ஓவரின் முதல் பந்தில் 13 ரன்களில் திமுத் கருணாரத்னேயின் விக்கெட்டை வீழ்த்திய ஜடேஜா, அடுத்த மூன்றாவது பந்தில் நைட்வாட்ச்மேனாகக் களமிறங்கிய சுரங்கா லக்மலை போல்ட் செய்து வெளியேற்றினார். 

4-வது நாளின் முடிவில், இலங்கை அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. 7 விக்கெட்டுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் அந்த அணி இன்னமும் 379 ரன்கள் எடுக்கவேண்டியுள்ளது. இதனால் தில்லி டெஸ்ட் போட்டியையும் இந்திய அணி வென்று தொடரை 2-0 என வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com