சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடக்கம்: களத்தில் இந்தியா, ஆஸி. உள்ளிட்ட 8 அணிகள்

மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
கோப்பையுடன் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன்.
கோப்பையுடன் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன்.

மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
இதில் நடப்புச் சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த முறை கோப்பையை வெல்வதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளிடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4 அணிகளே அரையிறுதிக்கு முன்னேறும் என கிரிக்கெட் நிபுணர்களும், முன்னாள் வீரர்களும் கணித்துள்ளனர்.
2013 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வாகை சூடியபோது இந்திய அணியில் இடம்பெற்றிருந்த 9 பேர் இந்த முறையும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இரு பயிற்சி ஆட்டங்களிலும் அபாரமாக ஆடியுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் (ஜூன் 4-ஆம் தேதி) பாகிஸ்தானை சந்திக்கிறது. ஐசிசி போட்டிகளில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றதில்லை. அந்த சாதனையை இந்த முறையும் தக்கவைப்பதில் இந்திய அணி தீவிரமாக உள்ளது.
கோப்பையை தக்கவைக்குமா?

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி முதல் முறையாக பெரிய போட்டியில் தலைமை வகிக்கிறார். எனவே அவருக்கு இந்தத் தொடர் முக்கியமான ஒன்றாகும். அதனால் இதில் வெல்வதற்கு அவர் தீவிரம் காட்டுவார்.
இந்திய அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்திய அணியின் இன்னிங்ஸை தொடங்கவுள்ள ரோஹித் சர்மா-ஷிகர் தவன் ஜோடி, கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. இந்த முறையும் அந்த ஜோடி இந்திய அணிக்கு வலுவான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்பலாம்.
இதுதவிர கேப்டன் விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது சமி கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா கூட்டணியும் பலம் சேர்க்கிறது. இந்தியா கோப்பையை தக்கவைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மிரட்டும் ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய அணியும் முழு பலத்தோடு களம் காண்கிறது. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், கிறிஸ் லின், கிளன் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், ஆரோன் ஃபிஞ்ச், மேத்யூ வேட் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் இடம்பெற்றுள்னர்.
வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேஸில்வுட், பேட் கம்மின்ஸ் போன்றோரும், சுழற்பந்து வீச்சில் ஆடம் ஸம்பாவும் பலம் சேர்க்கின்றனர். நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல கடுமையாகப் போராடும்.

அதிர்ஷ்டம் கை கொடுக்குமா?
அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் ஹஷிம் ஆம்லா, டேவிட் மில்லர், குயின்டன் டி காக், பெஹார்டியன், டூபிளெஸ்ஸிஸ் போன்ற பேட்ஸ்மேன்களும், ஜே.பி.டுமினி, கிறிஸ் மோரீஸ், பெலுக்வாயோ போன்ற ஆல்ரவுண்டர்களும் இடம்பெற்றுள்ளனர்.
வேகப்பந்து வீச்சில் மோர்ன் மோர்கல், காகிசோ ரபாடா, பிரிட்டோரியஸ், மோரீஸ் கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் இம்ரான் தாஹிர், கேசவ் மகாராஜ் ஆகியோரையும் நம்பியுள்ளது தென் ஆப்பிரிக்கா.
எனினும் தலைசிறந்த அணியான தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ஷ்டம் என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்த முறையாவது அந்த அணியை துரதிருஷ்டம் விட்டுவைக்குமா என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

இங்கிலாந்தின் குறை தீருமா? சமீபத்தில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்கும் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய், ஜோ ரூட், கேப்டன் இயான் மோர்கன், ஜோஸ் பட்லர், சாம் பில்லிங்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
ஆல்ரவுண்டர் இடத்தில் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, டேவிட் வில்லே போன்றோர் நம்பிக்கையளிக்கின்றனர்.
வேகப்பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ், மார்க் உட், லியாம் பிளங்கெட் போன்றவர்களும், சுழற்பந்து வீச்சில் ஆதில் ரஷித்தும் பலம் சேர்க்கின்றனர். இதுவரை ஐசிசி சார்பில் நடைபெறும் 50 ஓவர் போட்டிகளில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றதில்லை. அந்த குறையை இந்த முறை சொந்த மண்ணில் தீர்க்குமா?

கணிக்க முடியாத பாகிஸ்தான்: நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் கேன் வில்லியம்சன், ஆல்ரவுண்டர் கோரே ஆண்டர்சன் போன்றவர்களின் ஆட்டத்தைப் பொறுத்தே அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அமையும்.
பாகிஸ்தான் அணி கணிக்க முடியாத அணியாகவே உள்ளது. இலங்கை, வங்கதேச அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே. ஐசிசி போட்டிகளில் தவிர்க்க முடியாத அணியாகத் திகழ்ந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெறவில்லை.

ரூ.29 கோடி பரிசு
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.29 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.14 கோடியும், 2-ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.7 கோடியும் வழங்கப்படும்.
அரையிறுதி வரை முன்னேறும் அணிகளுக்கு தலா ரூ.3 கோடியும், குரூப் சுற்றின் முடிவில் 3-ஆவது இடம்பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.58 லட்சமும், 4-ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு ரூ.39 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.

இங்கிலாந்து-வங்கதேசம் இன்று மோதல்
சாம்பியன்ஸ் டிராபியின் முதல் ஆட்டம் லண்டனில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்தும், வங்கதேசமும் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்ற உற்சாகத்தில் களமிறங்கும் இங்கிலாந்து அணி, முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியோடு தொடங்கும் முனைப்பில் களம் காணுகிறது.
வங்கதேச அணி சமீபகாலமாக கணிக்க முடியாத வகையில் ஆடி வருகிறது. எனினும் இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் இங்கிலாந்து அணிக்கே அதிக வெற்றி வாய்ப்புள்ளது.
போட்டி நேரம்: பிற்பகல் 3

தமிழில் ஒளிபரப்பு
சாம்பியன்ஸ் டிராபி போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் சமீபத்தில் தமிழிலும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. அதிலும் சாம்பியன்ஸ் டிராபி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு பிரிவுகள்
போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் ஏ, பி, என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளும், பி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இதுவரை சாம்பியன்கள்
1998 தென் ஆப்பிரிக்கா
2000 நியூஸிலாந்து
2002 இந்தியா-இலங்கை கூட்டுச் சாம்பியன்
2004 மேற்கிந்தியத் தீவுகள்
2006 ஆஸ்திரேலியா
2009 ஆஸ்திரேலியா
2013 இந்தியா

கிறிஸ் கெயில் 791
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். 2002 முதல் 2013 வரையிலான காலங்களில் 17 ஆட்டங்களில் விளையாடியுள்ள கெயில் 3 சதங்களுடன் 791 ரன்கள் குவித்துள்ளார். இலங்கை முன்னாள் கேப்டன்களான மஹேல ஜெயவர்த்தனா (742), குமார் சங்ககாரா (683) ஆகியோர் அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

நாதன் ஆஸ்ட்லே 145*
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் நியூஸிலாந்தின் நாதன் ஆஸ்ட்லே, ஜிம்பாப்வேயின் ஆன்டி ஃபிளவர் ஆகியோர் தலா 145 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளனர். அதற்கடுத்தபடியாக முன்னாள் இந்திய கேப்டன்களான கங்குலி, சச்சின், முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித் ஆகியோர் தலா 141 ரன்கள் குவித்துள்ளனர்.

கிறிஸ் கெயில் 474
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் 474 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் ஷிகர் தவன் 363 ரன்களுடன் 2-ஆவது இடத்திலும், செளரவ் கங்குலி 348 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

சிறந்த பார்ட்னர்ஷிப்
2009-இல் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன்-ரிக்கி பாண்டிங் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 252 ரன்கள் குவித்ததே சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு ஜோடியின் சிறந்த பார்ட்னர்ஷிப் ஆகும்.

கைல் மில்ஸ் 28
சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸ் முதலிடத்தில் உள்ளார். 2002 முதல் 2013 வரையிலான காலங்களில் 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 28 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இலங்கை வீரர் முத்தையா முரளீதரன் 2-ஆவது இடத்திலும் (24 விக்கெட்டுகள்), இலங்கையின் லசித் மலிங்கா, ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ ஆகியோர் 3-ஆவது இடத்திலும் (22 விக்கெட்டுகள்) உள்ளனர்.

ஹாட்ரிக் நாயகன்
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை மேற்கிந்தியத் தீவுகளின் ஜெரோம் டெய்லரையே சேரும். அவர் 2006-இல் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மும்பையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

சிறந்த பந்துவீச்சு
2006-இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மெஹரூஃப் 14 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாம்பியன்ஸ் டிராபியின் சிறந்த பந்துவீச்சாக இன்றளவும் உள்ளது.

ஆல்ரவுண்டர் காலிஸ்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அசத்திய ஆல்ரவுண்டர்கள் வரிசையில் தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ் முதலிடத்தில் உள்ளார். அவர் 17 ஆட்டங்களில் விளையாடி 653 ரன்களும், 20 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

அபார வெற்றி
2004-இல் அமெரிக்காவுக்கு எதிராக 210 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி கண்டதே சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஓர் அணி பெற்ற அபார வெற்றியாகும். இதேபோல் அந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி எடுத்த 347 ரன்களே, சாம்பியன்ஸ் டிராபியில் ஓர் அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.

அதிக ரன் குவிக்கப்பட்ட ஆட்டம்
2013-இல் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டத்தின்போது 636 ரன்கள் குவிக்கப்பட்டன. இதுதான் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன் குவிக்கப்பட்ட ஆட்டம். இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 305 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

லண்டனில் புதன்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com