Enable Javscript for better performance
இன்று தொடங்குகிறது டி20 கிரிக்கெட் தொடர் : முதல் வெற்றிக்காக இந்தியா-நியூஸிலாந்து மோதல்- Dinamani

சுடச்சுட

    

    இன்று தொடங்குகிறது டி20 கிரிக்கெட் தொடர் : முதல் வெற்றிக்காக இந்தியா-நியூஸிலாந்து மோதல்

    By DIN  |   Published on : 01st November 2017 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    india

    இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெறுகிறது.
    இது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் இந்தியாவின் மூத்த பந்துவீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ராவுக்கு இது கடைசி ஆட்டமாகும். இந்த ஆட்டத்தை அவருக்கான பிரியாவிடை ஆட்டமாக வழங்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    இந்திய அணியைப் பொருத்த வரையில், இதே நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை சமீபத்தில் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஆனால், டி20 வரலாற்றை கணக்கில் கொண்டால், கடந்த ஆண்டில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டங்களில் இந்தியா தோல்வி கண்டுள்ளது. அதில், டி20 உலகக் கோப்பை போட்டியின் ஆட்டமும் அடங்கும்.
    அணியின் பேட்ஸ்மேன்களைப் பொருத்த வரையில், கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா, கேப்டன் கோலி உள்ளிட்ட வீரர்கள் ரன் குவித்து தகுந்த ஃபார்மில் உள்ளனர். அவர்களுக்குத் துணையாக ஷிகர் தவன், எம்.எஸ்.தோனி ஆகியோர் இருக்கின்றனர்.


    ஆல் ரவுண்டர் பிரிவில் ஹார்திக் பாண்டியா பலம் சேர்க்கிறார். வேகப்பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பூம்ராவும், சுழற்பந்துவீச்சில் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவும் அணிக்கு பலமாக உள்ளனர். விடைபெறும் வேகப்பந்துவீச்சாளரான நெஹ்ரா, தனது கடைசி ஆட்டத்தில் முத்திரை பதிக்க முயலுவார் என நம்பலாம்.
    நியூஸிலாந்து அணியைப் பொருத்த வரையில், ஒருநாள் தொடரில் கண்ட தோல்விக்கு, டி20 தொடரில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களம் காணும். அணியின் பேட்டிங்கில் ராஸ் டெய்லர், கேன் வில்லியம்சன், டாம் லதாம் ஆகியோர் ரன் குவிப்பில் ஈடுபடலாம். இந்திய பேட்ஸ்மேன்களை திணறடிக்க டிரென்ட் போல்ட், மிட்செல் சேன்ட்னர் உள்ளிட்டோர் காத்திருக்கின்றனர்.
    தரவரிசை: முதலிடத்தில் பூம்ரா
    டி20 பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பூம்ரா முதலிடத்துக்கு வந்துள்ளார். முன்னதாக அந்த இடத்தில் இருந்த பாகிஸ்தானின் இமத் வாஸிம் ஓரிடம் இறங்கியதை அடுத்து, பூம்ரா முன்னேற்றம் கண்டுள்ளார். 
    இதனிடையே, டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். அணிகளுக்கான தரவரிசையில் தற்போது 5-ஆவது இடத்தில் இருக்கும் இந்திய அணி, நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 என கைப்பற்றினால், 2-ஆவது இடத்துக்கு முன்னேறும். அப்போது, முதலிடத்தில் இருக்கும் நியூஸிலாந்து 5-ஆவது இடத்துக்கு தள்ளப்படுவதுடன், 2-ஆவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் முதலிடத்துக்கு முன்னேறும். இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றாலும், பாகிஸ்தான் 
    முதலிடம் பெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai