பிரியாவிடை எதிர்பார்க்காத ராகுல் டிராவிடும் நெஹ்ராவின் கடைசி விருப்பமும்!

ஒரு கிரிக்கெட் வீரர் சொந்த மண்ணில் தனது பயணத்தை ஆரம்பிப்பதில்லை. எனில், ஓய்வு பெறுவது மட்டும்...
பிரியாவிடை எதிர்பார்க்காத ராகுல் டிராவிடும் நெஹ்ராவின் கடைசி விருப்பமும்!

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தில்லியில் இன்று நடைபெறுகிறது.

இது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் இந்தியாவின் மூத்த பந்துவீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ராவின் கடைசி ஆட்டம். இந்த ஆட்டம் அவருக்கான பிரியாவிடை ஆட்டமாக அமையவுள்ளது. இதையடுத்து இந்திய அணியில் நெஹ்ரா இடம்பிடிப்பார் எனத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும் சூழலைப் பார்க்கும்போது நெஹ்ராவுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது. 

டி20 தரவரிசையில் நியூஸிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. நியூஸிலாந்துக்கு எதிராக இதுவரை விளையாடிய 5 டி20 ஆட்டங்களிலும் இந்திய அணி தோற்றுள்ளது. எனவே வெற்றிக்கணக்கைத் தொடங்க இந்திய அணி மிகுந்த ஆர்வத்தில் உள்ளது. இந்த நிலையில் நெஹ்ராவின் தேர்வு ஆர்வத்தையும் பரபரப்பையும் ஒரே சமயத்தில் உருவாக்கியுள்ளது. நெஹ்ரா இந்தப் போட்டியில் விளையாடுவது உறுதி என்றாலும் இதனால் புவனேஸ்வர் அல்லது பூம்ரா ஆகிய ஒருவரை அணியிலிருந்து வெளியேற்ற வேண்டிய சூழல் கோலிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்களில் புவனேஸ்வரும் பூம்ராவும்தான் முதன்மைத் தேர்வு என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது. இந்த நிலையில் தில்லி டி20 ஆட்டத்துடன் ஓய்வு என்று நெஹ்ரா அறிவித்துள்ளதால் அவரை அணியில் சேர்க்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. நெஹ்ராவை நல்ல மரியாதையுடன் வழியனுப்பி வைக்கவேண்டிய கடமை பிசிசிக்கும் கோலி, ரவி சாஸ்திரிக்கும் உள்ளது. கிரிக்கெட் பயணத்தின் கடைசி நாளில் இப்படியொரு நெருக்கடியைத் தரலாமா நெஹ்ரா? (ஒருவேளை, நெஹ்ரா தேர்வு செய்யப்படாவிட்டால் அது சர்ச்சையை உருவாக்கவும் வாய்ப்புண்டு!) நியூஸிலாந்து டி20 தொடர் முடிந்தபிறகு நெஹ்ரா தனது ஓய்வு அறிவிப்பை அறிவித்திருக்கலாம். ஒரு கிரிக்கெட் வீரர் சொந்த மண்ணில் தனது பயணத்தை ஆரம்பிப்பதில்லை. அந்த அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. எனில், ஓய்வு பெறுவது மட்டும் சொந்த மண்ணில் நிகழவேண்டும் என்று ஆசைப்படுவது ஏன்? அதுவும் அணியில் தனக்கான இடம் உறுதியில்லாதபோது இதுபோன்ற ஓர் அறிவிப்பை நெஹ்ரா தவிர்த்திருக்கலாம் அல்லவா!

ராகுல் டிராவிடின் ஓய்வு அறிவிப்பு எல்லா கிரிக்கெட் வீரர்களுக்குமான முன்னுதாரணம். 2011 இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் டிராவிட் மட்டும் பிரமாதமாக ஆடினார் ( 4 டெஸ்டுகளில் 3 சதங்கள்). இதனால் 2 வருடங்களாக ஒருநாள் அணியில் இடம்பெறாத டிராவிடை திடீரென ஒருநாள், டி20 என இரு அணிகளிலும் சேர்த்துக்கொண்டார்கள் (அந்த ஒரு டி20 போட்டியில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து ஆச்சர்யப்படுத்தினார்). 

இந்தத் தேர்வை எதிர்பாராத டிராவிட், இதற்கு மேலும் சங்கடங்கள் வேண்டாம் என்று அப்போதே இங்கிலாந்து தொடருக்குப் பிறகு ஒருநாள், டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிறகு 2012-ல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் சரியாக விளையாடாததால் டெஸ்ட் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இந்த அறிவிப்பை டெஸ்ட் தொடர் முடிந்தபிறகுதான் அறிவித்தார். இதனால் கிரிக்கெட் வீரர்கள் பலர் அனுபவித்த பிரியாவிடை டெஸ்ட் அல்லது சொந்த மண்ணில் கடைசி சர்வதேசப் போட்டி போன்ற அனுகூலங்கள் ராகுல் டிராவிடுக்கு அமையவில்லை. அவர் அதை எதிர்பார்க்கவும் இல்லை.

இதனால்தான் தனது கடைசி டெஸ்டை அடிலெய்டிலும் கடைசி ஒருநாள் போட்டியை கார்டிஃபிலும் ஒரேயொரு டி20 போட்டியை மான்சஸ்டரிலும் ஆடி முடித்தார். அவர் நினைத்திருந்தால் ஜாம் ஜாம் என்று பெங்களூரில் ஓய்வு பெற்றிருக்கலாம். யார் மறுத்திருக்கமுடியும்? பிரியாவிடை டெஸ்ட் தேவையில்லை. அது சரியல்ல என்றவர் தனது ஓய்வு அறிவிப்பை பெங்களூர் சின்னசாமி மைதானத்திலுள்ள அரங்கில் வைத்து அறிவித்தார்.

சமீபத்தில் டிராவிடம், தோனி அவராக எப்போது நினைக்கிறாரோ, அப்போதுதான் ஓய்வு பெறுவாரா என்று கேட்கப்பட்டது. தோனியைத் தவறாக எண்ணவேண்டாம். இப்போது நெஹ்ராவே தான் எப்போது ஓய்வுபெறவேண்டும் என்பதை முடிவு செய்கிறாரே என்று பதில் அளித்தார் டிராவிட்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com