ரோஹித், தவன் அதிரடி அரைசதம்: இந்தியா 202 ரன்கள் குவிப்பு

முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவிப்பு.
ரோஹித், தவன் அதிரடி அரைசதம்: இந்தியா 202 ரன்கள் குவிப்பு

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெறுகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் இந்தியாவின் மூத்த பந்துவீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ராவுக்கு இது கடைசி ஆட்டமாகும். எனவே அவருக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன் ஜோடி அதிரடியாக ஆடியது. இவர்கள் இருவரும் அளித்த எளிய கேட்ச் வாய்ப்புகளை நியூஸிலாந்து வீரர்கள் கோட்டை விட்டனர். 

இதனை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ரோஹித் ஷர்மா 56 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 80 ரன்கள் விளாசினார். மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவன் 52 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் குவித்தார்.

இப்போட்டியின் மூலம் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் ரோஹித் ஷர்மா முதலிடம் பிடித்தார். 

ரோஹித், தவன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 158 ரன்கள் குவித்தது. சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு விக்கெட்டுக்கு 150 ரன்களுக்கு மேல் இந்தியா குவிப்பது இதுவே முதன்முறையாகும்.

பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா டக்-அவுட்டாகி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி அதிரடியாக ஆடி 3 சிக்ஸர்களை விளாசி 26 ரன்களுடனும், கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி 2 பந்துகளில் 1 சிக்ஸருடன் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com