Enable Javscript for better performance
முதல் டி20: இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    india

    நியூஸிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    இந்த ஆட்டத்துடன், இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆட்டத்துக்கு முன்பான பயிற்சியின்போது கேப்டன் கோலி, தோனி ஆகியோர் அணியின் சார்பில் நெஹ்ராவுக்கு நினைவுப் பரிசு வழங்கினர்.
    இந்திய அணி பந்துவீச்சின்போது முதல் ஓவரையும், கடைசி ஓவரையும் நெஹ்ராவே வீசினார். எனினும் அவர் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. ஆட்டம் முடிந்த பிறகு அணி வீரர்களுடன் மைதானத்தை வலம் வந்த நெஹ்ரா ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார்.
    தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வீழ்ந்தது.
    முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணியில் களமிறங்கிய தவன்-ரோஹித் ஜோடி அற்புதமான தொடக்கத்தை அணிக்கு அளித்தது. இருவருமே அரைசதம் கடந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில் ஷிகர் தவன் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசியிருந்தார். தொடர்ந்து வந்த பாண்டியா டக் அவுட் ஆக, கேப்டன் கோலி களம் கண்டார்.
    கோலி தனது பங்கிற்கு சற்று விளாச, மறுமுனையில் 80 ரன்கள் எட்டிய நிலையில் ரோஹித் ஆட்டமிழந்தார். அவர் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை பறக்க விட்டிருந்தார். ரோஹித்தை அடுத்து வந்த தோனி, முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்டார். இவ்வாறாக 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது இந்தியா. கோலி 26, தோனி 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து தரப்பில் ஐஷ் சோதி 2, போல்ட் ஒரு விக்கெட் எடுத்தனர்.
    பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் லதாம் மட்டும் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். கேப்டன் வில்லியம்சன் 28, டாம் புரூஸ் 10 ரன்களில் ஆட்டமிழக்க, எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களையே எட்டியது நியூஸிலாந்து. சேன்ட்னர் 27, சோதி 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    இந்திய தரப்பில் சாஹல், படேல் தலா 2 விக்கெட்டுகளும், புவனேஸ்வர், பூம்ரா, பாண்டியா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.


    'ஆஷிஷ் நெஹ்ரா என்ட்'
    முதல் டி20 ஆட்டம் நடைபெற்ற ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் இரு 'என்ட்'களில் ஒன்றுக்கு புதன்கிழமை 'ஆஷிஷ் நெஹ்ரா என்ட்' என பெயர் சூட்டப்பட்டிருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நெஹ்ராவை கெளரவிக்கும் விதமாக தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதன்கிழமைக்கு மட்டுமாக இந்த ஏற்பாட்டை செய்திருந்தது.
    சர்வதேச கிரிக்கெட்டில் இத்தகைய கெளரவத்தை பெறும் 2-ஆவது பந்துவீச்சாளர் நெஹ்ரா ஆவார். முன்னதாக, இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இத்தகைய கெளரவம் அளிக்கப்பட்டிருந்தது.
    கோலி புகழாரம்
    ஓய்வு பெறும் ஆஷிஷ் நெஹ்ரா குறித்து விராட் கோலி புதன்கிழமை கூறுகையில், 'நெஹ்ரா இப்போது வரை விளையாடி வருகிறார். ஒரு வேகப்பந்துவீச்சாளராக 19 ஆண்டுகள் விளையாடியது சாதனையாகும். என் உடன் விளையாடிய வீரர்களில் நெஹ்ரா மிகச் சிறந்த ஒருவர். இளம் வீரர்களுக்கு உதவும் அவர் போன்றவர்கள் ஓய்வு பெறுவது வருத்தமளிக்கிறது' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai