வாக்கி டாக்கியில் பேசிய விராட் கோலி: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐசிசி!

தில்லி டி20 போட்டியின்போது வாக்கி டாக்கியில் விராட் கோலி பேசியதில் எவ்வித விதிமுறை மீறலும் இல்லை என...
வாக்கி டாக்கியில் பேசிய விராட் கோலி: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐசிசி!

தில்லி டி20 போட்டியின்போது வாக்கி டாக்கியில் விராட் கோலி பேசியதில் எவ்வித விதிமுறை மீறலும் இல்லை என ஐசிசி அதிகாரி தெரிவித்துள்ளார்.   

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த ஆட்டத்துடன், இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் இந்தப் போட்டியின்போது டக்அவுட் பகுதியில் சக வீரர்களுடன் அமர்ந்திருந்த விராட் கோலி, வாக்கி டாக்கியில் யாருடனோ பேசிக்கொண்டிருக்கும் காட்சி தொலைக்காட்சியில் வெளியானது. இதனால் பரபரப்பு உண்டானது. ஐசிசி விதிமுறைகளை விராட் கோலி மீறிவிட்டார், எந்த வீரரும் போட்டியின்போது யாருடனும் செல்போனிலோ வாக்கி டாக்கியிலோ பேசக்கூடாது. எனவே கோலி சிக்கலுக்கு ஆளாகவுள்ளார் என்று பலர் கருத்து தெரிவித்தார்கள். மேலும் இதுகுறித்து ஐசிசி நடவடிக்கை எடுக்குமா என்கிற கேள்விகளும் எழுந்தன.

ஐசிசியைச் சேர்ந்த அதிகாரி இதுபற்றி கூறியதாவது: பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அணியைச் சேர்ந்தவர்கள் டக் அவுட் மற்றும் ஓய்வறை போன்ற பகுதிகளின் இடையே தகவல்களைப் பரிமாறிக்கொள்ள வாக்கி டாக்கியைப் பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்றைய போட்டியில் மைதானத்தில் இருந்த ஐசிசியின் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அனுமதி பெற்றபிறகே விராட் கோலி வாக்கி டாக்கியைப் பயன்படுத்தினார். எனவே இதில் எவ்விதத் தவறும் இல்லை என்றார். 

ஐசிசி விதிமுறைகளின்படி, வீரர்கள் போட்டியின்போது செல்போனைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீரர்களும் பயிற்சியாளர்களும் இதர உறுப்பினர்களும் தகவல் பரிமாற்றத்துக்காக வாக்கி டாக்கியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் அடிப்படையில் கோலி வாக்கி டாக்கியைப் பயன்படுத்தியதில் விதிமுறை மீறல்கள் எதுவும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com