வண்டியின் பின்னால் அமர்ந்திருந்தாலும் காயம் ஏற்படும்: ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து நேரில் அறிவுறுத்திய சச்சின்! (வீடியோ)

நீங்களும் ஹெல்மெட் அணியவேண்டும். அவருக்கு மட்டுமல்ல உங்களுக்கும்தான் காயம் உண்டாகும்...
வண்டியின் பின்னால் அமர்ந்திருந்தாலும் காயம் ஏற்படும்: ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து நேரில் அறிவுறுத்திய சச்சின்! (வீடியோ)

கொச்சியில் நடைபெறவுள்ள ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், கேரள பிளாஸ்டர்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவருமான சச்சின் டெண்டுல்கர் நேரில் வந்து அழைப்பு விடுத்தார். இதற்காக திருவனந்தபுரம் சென்ற சச்சின், வாகனத்தில் செல்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவுரை ஒன்றைக் கூறியுள்ளார்.

சச்சின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கேரள இளம் தம்பதியருக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்த ஆலோசனையை வழங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

காரில் செல்லும் சச்சின் பைக்குகளில் செல்பவர்களிடம் ஹெல்மெட் குறித்த அறிவுரைகளை வழங்குகிறார். வண்டியின் பின்னால் அமர்ந்திருந்த பெண்களிடம், ஹெல்மெட் எங்கே? நீங்களும் ஹெல்மெட் அணியவேண்டும். அதுதான் பாதுகாப்பானது என்கிறார். பிறகு வீடியோவைப் பார்த்து, வண்டி ஓட்டுபவர் மட்டும் ஏன் ஹெல்மெட் அணியவேண்டும்? நான் பார்த்த இரு பெண்களும் ஹெல்மெட் அணியவில்லை. இது சரியல்ல. வண்டியில் எப்போது பயணித்தாலும் ஹெல்மெட் அணிந்துகொள்ளவேண்டும் என்றவர், சில நொடிகள் காத்திருந்து அந்த இளம் தம்பதியரிடம் மீண்டும் அறிவுரை கூறும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

சச்சின் காரின் அருகே வந்த தம்பதியரிடம் சச்சின் மீண்டும் பேசினார். வண்டியின் பின்னால் உள்ள பெண்ணிடம், நீங்களும் ஹெல்மெட் அணியவேண்டும். அவருக்கு மட்டுமல்ல உங்களுக்கும்தான் காயம் உண்டாகும் என்று அறிவுரை கூறிய வீடியோவைச் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு விஷயங்களையும் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார். சச்சினின் இந்த நடவடிக்கைக்கு ஏராளமான பாராட்டுகள் கிடைத்துள்ளன.

இதனிடையே, ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து அறிவுறுத்திய சச்சின், காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாதது ஏன் என்கிற கேள்விகளும் எழுந்தன. இதையடுத்து சீட் பெல்ட் அணிந்துகொண்டு எடுத்த புகைப்படத்தையும் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com