Enable Javscript for better performance
எலைட் டிராபி டென்னிஸ்: வாகை சூடினார் ஜூலியா- Dinamani

சுடச்சுட

    
    julia

    வெற்றிக் கோப்பையுடன் ஜூலியா.

    சீனாவில் நடைபெற்ற எலைட் டிராபி டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியின் ஜூலியா ஜியார்ஜஸ் ஞாயிற்றுக்கிழமை பட்டம் வென்றார். இது, இந்த ஆண்டில் ஜூலியா கைப்பற்றும் 2-ஆவது பட்டமாகும். முன்னதாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருந்த ஜூலியா, போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த அமெரிக்காவின் 
    கோகோ வான்டெவெக்கை 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இருவருக்கும் இடையே விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டின் தொடக்கத்தில் கோகோ ஆதிக்கம் 
    செலுத்தினார். முதல் செட்டின் 2-ஆவது கேமில் ஜூலியாவுக்கு நெருக்கடி அளித்த அவர், சர்வை வசமாக்கியதால் 3-0 என முன்னிலை பெற்றார். இந்நிலையில், 9-ஆவது கேமில் கோகோவின் சர்வை பிரேக் செய்து மீண்டு வந்தார் ஜூலியா. முதல் செட் நிறைவடைய இருந்தபோது விரக்தியடைந்த கோகோ, தனது ராக்கெட்டை தரையில் அடித்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். பின்னர் நடைபெற்ற 
    ஆட்டத்திலும் ஜூலியா அதிரடியாக ஆட, ஆட்டம் அவர் வசமானது. இந்த வெற்றியின் மூலம் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 14-ஆவது இடத்தில் உள்ள நிலையிலேயே இந்த சீசனை நிறைவு செய்துள்ளார் ஜூலியா. இது, தரவரிசை வரலாற்றில் அவரது அதிகபட்சமாகும். இதையடுத்து, எலைட் டிராபி பட்டத்தை கைப்பற்றிய வீராங்கனைகள் வரிசையில், செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோருடன் ஜூலியாவும் இணைந்துள்ளார். ஜூலியா கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிரெம்லின் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. சீன ஜோடி வெற்றி: 
    இதனிடையே, எலைட் டிராபி டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் சீனாவின் துவான் யிங்யிங்-ஹான் ஸின்யுன் ஜோடி, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் தங்களது நாட்டைச் சேர்ந்த லு ஜிங்ஜிங்-ஸாங் ஷுவாய் ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai