தோனி, டிராவிட் எனக்கு ஆதரவளிக்கவில்லை: ஸ்ரீசாந்த் வருத்தம்!

தோனிக்கு உணர்வுபூர்வமான மெசேஜ் ஒன்றை அனுப்பியும் அவர் பதில் அனுப்பவில்லை...
தோனி, டிராவிட் எனக்கு ஆதரவளிக்கவில்லை: ஸ்ரீசாந்த் வருத்தம்!

2013-இல் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜீத் சாண்டிலா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதித்தது பிசிசிஐ. இந்த நிலையில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேரை ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் இருந்து தில்லி நீதிமன்றம் கடந்த 2015 ஜூலையில் விடுவித்தது. இதையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் ஸ்ரீசாந்த்.  ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை சமீபத்தில் நீக்கியது கேரள உயர் நீதிமன்றம். இதுதவிர ஸ்ரீசாந்துக்கு எதிராக பிசிசிஐ மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது. 

அதை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற அமர்வு, ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கிய ஒரு நபர் அடங்கிய அமர்வின் உத்தரவை தள்ளுபடி செய்தது. மேலும் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையையும் உறுதி செய்தது.

இந்நிலையில், சூதாட்ட விவகாரத்தில் 13 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டதாகவும், ஆனால் பிசிசிஐ தனக்கு எதிராக மட்டுமே ஒருதலைப்பட்டசமாக செயல்பட்டதாகவும் ஸ்ரீசாந்த் சமீபத்தில் கருத்து தெரிவித்தார். அத்துடன், தனக்கு எதிராக விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்குமாறு பிசிசிஐக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் ஸ்ரீசாந்த் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்கு ஸ்ரீசாந்த் அளித்த பேட்டியில் இதுபற்றி மேலும் கூறியதாவது: 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பாக இருந்த ராகுல் டிராவிட், என்னைப் பற்றி அவருக்கு நன்குத் தெரிந்தபின்பும் எனக்கு ஆதரவளிக்கவில்லை. தோனிக்கு உணர்வுபூர்வமான மெசேஜ் ஒன்றை அனுப்பியும் அவர் பதில் அனுப்பவில்லை. 

இது தேசிய அணியல்ல. பிசிசிஐ என்பது தனியார் நிறுவனம். எனக்கு வாய்ப்பு வழங்கினால் மீண்டும் விளையாடுவேன். இல்லாவிட்டால் வேறொரு நாட்டுக்காக விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com