Enable Javscript for better performance
ஆசிய கோப்பை வெற்றி ஓர் அடித்தளம் மட்டுமே: இந்திய ஹாக்கி பயிற்சியாளர்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய கோப்பை வெற்றி ஓர் அடித்தளம் மட்டுமே: இந்திய ஹாக்கி பயிற்சியாளர்

    By DIN  |   Published on : 07th November 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    harendar-sing

    ஆசிய கோப்பை ஹாக்கி வெற்றியானது இந்திய மகளிர் அணிக்கான ஓர் அடித்தளம் என்றும், அவர்கள் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டியுள்ளது என்றும் அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறினார்.
    இந்திய மகளிர் ஹாக்கி அணி, 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்திய ஆடவர் இளையோர் ஹாக்கி அணி பயிற்சியாளரான ஹரேந்திர சிங், மகளிர் அணி பயிற்சியாளராக ஆசிய கோப்பை போட்டிக்கு சமீபமாக நியமிக்கப்பட்டிருந்தார்.
    இந்நிலையில், மகளிர் அணியின் வெற்றி குறித்து ஹரேந்திர சிங் கூறியதாவது:
    மகளிர் அணி வென்றுள்ள ஆசிய கோப்பை, ஒரு அடித்தளம் மட்டுமே. அவர்கள் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டியுள்ளது. அடுத்த ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி, உலகக் கோப்பை போட்டி ஆகிய மூன்று முக்கிய போட்டிகள் உள்ளன.
    குறைந்தபட்சம் அவற்றில் இரண்டிலாவது இந்திய மகளிர் அணி பதக்கம் வெல்வதே எனது இலக்காகும். இந்த ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியை, ஒரு பயிற்சியாளராக இல்லாமல் கவனித்தேன். அதன்மூலம், முடியாதது எதுவும் இல்லை என்பதை அறிந்துகொண்டேன்.
    இந்த ஆண்டு நடைபெற்ற உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக, மகளிர் ஹாக்கியை நான் கவனித்தது இல்லை. ஆனால், அவர்களது வெற்றிக்கும் என்னால் பங்களிப்பு செய்ய இயலும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
    ஒரு பயிற்சியாளராக ஒவ்வொரு போட்டியுமே எனக்கு முக்கியமானது. ஆடவர் ஜூனியர் அணியை தயார்படுத்த எனக்கு 3 ஆண்டுகள் இருந்தது. ஆனால், மகளிர் அணியை தயார்படுத்த என்னிடம் 23-24 நாள்களே இருந்தது. இரு வெற்றிகளிலும் கிடைக்கும் திருப்தி என்பது வெவ்வேறாக இருக்கும் என்று ஹரேந்திர சிங் கூறினார்.
    தலா ரூ.1 லட்சம் பரிசு
    ஆசிய கோப்பை ஹாக்கியில் பட்டம் வென்ற, 18 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசாக ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.
    அத்துடன் பயிற்சியாளர் ஹரேந்திர சிங்கிற்கு ரூ.1 லட்சமும், உதவிப் பணியாளர்களுக்கு தலா ரூ.50,000-ம் ரொக்கப் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    10-ஆவது இடத்தில் இந்தியா
    ஆசிய கோப்பை ஹாக்கியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, தரவரிசையில் 2 இடங்கள் ஏற்றம் கண்டு 10-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. இப்பட்டியலில் ஐரோப்பிய சாம்பியனான நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது.
    இதனிடையே, சமீபத்தில் வெளியான ஆடவர் அணிக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா 6-ஆவது இடத்தில் நீடிக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai