Enable Javscript for better performance
டி20 தொடரை கைப்பற்றுவது யார்?: இந்தியா-நியூஸி. இன்று மோதல்- Dinamani

சுடச்சுட

    

    டி20 தொடரை கைப்பற்றுவது யார்?: இந்தியா-நியூஸி. இன்று மோதல்

    By DIN  |   Published on : 07th November 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ground

    கனமழை காரணமாக மூடிவைக்கப்பட்டுள்ள ஆடுகளம்.

    இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
    மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடர், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதை அடுத்து சமநிலையில் உள்ளது. எனவே, கடைசி ஆட்டத்தில் வென்று எந்த அணி தொடரைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலோங்கியுள்ளது.
    தில்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, டி20-இல் கடந்த 6 ஆட்டங்களில் நியூஸிலாந்துக்கு எதிராக முதல் முறையாக வாகை சூடியிருந்தது. எனினும், அந்த மகிழ்ச்சியை நீடிக்க விடாத வகையில் 2-ஆவது ஆட்டத்தில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்று மீண்ட நியூஸிலாந்து, தொடரையும் சமன் செய்தது.
    இதனால், சொந்த மண்ணில் சமீபத்தில் எந்தத் தொடரையும் இழக்காமல் வெற்றி நடை போட்டுவரும் இந்திய அணிக்கு, தொடரை கைப்பற்றியாக வேண்டிய நெருக்கடி எழுந்துள்ளது.
    முந்தைய ஆட்டத்தில் இந்தியாவின் தொடக்க வீரர்களான ரோஹித், தவன் ஜோடி ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தது. முதல் ஆட்டத்தில் அருமையான தொடக்கத்தை அளித்த இந்த ஜோடி, 3-ஆவது ஆட்டத்தில் மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி, தோனி ஆகியோர் அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றனர்.
    இந்தத் தொடரின் இரு ஆட்டங்களிலுமே சோபிக்காமல் போன அதிரடி ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, இந்த ஆட்டத்திலாவது தனது முத்திரையை பதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பந்துவீச்சைப் பொருத்த வரையில், கடந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து வீரர்களை 200 ரன்களுக்குள்ளாக கட்டுப்படுத்தினர் பூம்ராவும், புவனேஸ்வரும்.
    இந்த ஆட்டத்திலும், அக்ஸர் படேல், யுவேந்திர சாஹலுடன் இணைந்து அந்தப் பணியை அவர்கள் சிறப்பாக செய்வார்கள் என நம்பலாம்.
    நியூஸிலாந்து அணியைப் பொருத்த வரையில், 2-ஆவது ஆட்டத்தில் மிரட்டல் அடி மூலம் அணியின் வெற்றிக்கு வித்திட்டார் காலின் மன்ரோ. இந்த ஆட்டத்திலும் அவரை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு உள்ளது. அவர் தவிர டாம் லதாம், கப்டில் உள்ளிட்டோர் அணியின் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.
    பந்துவீச்சில் கடந்த ஆட்டத்தில் மிரட்டிய டிரென்ட் போல்ட்டை, இந்த ஆட்டத்திலும் இந்திய பேட்ஸ்மேன்கள் கவனமுடன் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவருக்கு உதவியாக சேன்ட்னர், கிரான்ட்ஹோம் ஆகியோர் உள்ளனர்.

    மிரட்டும் மழை...
    3-ஆவது டி20 ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை கனமழை பெய்தது. இதையடுத்து, ஆடுகளம் தார்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டிருந்தன. ஆட்டம் நடைபெறவுள்ள செவ்வாய்க்கிழமை அங்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை வழிவிடும் பட்சத்தில், ஆட்டம் நடைபெறும். திருவனந்தபுரத்தில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 
    சர்வதேச கிரிக்கெட் ஆட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஆட்ட நேரம்: இரவு 7 மணி, நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai