Enable Javscript for better performance
டென்னிஸ் தரவரிசை திவிஜ் சரண் முன்னேற்றம்- Dinamani

சுடச்சுட

    
    tvij

    சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவிஜ் சரண் 50-ஆவது இடத்துக்கு முதல் முறையாக முன்னேறினார். மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்சா 12-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
    ஐரோப்பிய ஓபன் போட்டியின் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற திவிஜ் சரண், கடைசியாக தான் பங்கேற்ற 3 சேலஞ்சர் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார். இதன் காரணமாக, அவர் தற்போது 50-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
    இதையடுத்து, இரட்டையர் பிரிவில் திவிஜ் சரணையும் சேர்த்து முதல் 50 இடங்களுக்குள்ளாக இரு இந்தியர்கள் உள்ளனர். முன்னதாக, ரோஹன் போபண்ணா 15-ஆவது இடத்தில் உள்ளார். இரட்டையர் பிரிவில் திவிஜ் சரணின் நீண்டநாள் இணையான பூரவ் ராஜா 62-ஆவது இடத்தில் உள்ளார். லியாண்டர் பயஸ், ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோர் முறையே 70 மற்றும் 97-ஆவது இடங்களில் உள்ளனர்.
    இதனிடையே, ஷென்ஸன் சேலஞ்சரில் ஸ்ரீராம் பாலாஜியுடன் இணைந்து பட்டம் வென்ற விஷ்ணு வர்தன் 16 இடங்கள் முன்னேற்றம் கண்டு, முதல் முறையாக 116-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். ஸ்ரீராம் பாலாஜி 139-ஆவது இடத்தில் உள்ளார்.
    ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் யூகி பாம்ப்ரி 145, ராம்குமார் ராமநாதன் 148, பிரஜனேஷ் கன்னேஸ்வரன் 255, சுமித் நாகல் 331, பாலாஜி 350-ஆவது இடங்களில் உள்ளனர்.
    சானியா பின்னடைவு: இதனிடையே, மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா 3 இடங்கள் கீழிறங்கி, 12-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் முதல் 10 இடங்களை விட்டு வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.
    2013 மார்ச் 17-ஆம் தேதிக்குப் பிறகு அவர் முதல் 10 இடங்களுக்குள்ளாகவே இடம்பெற்று வந்தார். முன்னதாக, 2016-ஆம் ஆண்டு சீசன் முழுவதும் அவர் இரட்டையர் தரவரிசையின் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
    மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகளின் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் அங்கிதா ரெய்னா, தரவரிசையில் 281-ஆவது இடத்தில் உள்ளார். கர்மான் கெளர் தண்டி 307, பிரஞ்ஜலா யட்லபள்ளி 483-ஆவது இடத்தில் உள்ளனர்.
    முர்ரே, ஜோசோவிச்சுக்கு பின்னடைவு
    டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் முதல் 10 இடங்களை விட்டு முதல் முறையாக வெளியேறியுள்ளனர்.
    இதில், இடுப்புப் பகுதி காயம் காரணமாக கடந்த ஜூலை முதல் களம் காணாமல் இருக்கும் முர்ரே, தரவரிசையின் 3-ஆவது இடத்தில் இருந்து 16-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வரும் ஜோகோவிச், 5 இடங்கள் கீழிறங்கி 12-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் இத்தகைய பின்னடைவை சந்திப்பது இது முதல் முறையாகும்.
    சமீபத்தில் பாரீஸ் மாஸ்டர்ஸில் சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் ஜேக் சாக், 13 இடங்கள் முன்னேறி 9-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai