ஷார்ஜாவில் டி10 போட்டி: சேவாக், பொலார்ட் உள்ளிட்ட பிரபல வீரர்கள் பங்கேற்பு!

மராத்தா அராபியன்ஸ் அணியின் கேப்டனாக சேவாக் நியமிக்கப்பட்டுள்ளார்... 
ஷார்ஜாவில் டி10 போட்டி: சேவாக், பொலார்ட் உள்ளிட்ட பிரபல வீரர்கள் பங்கேற்பு!

ஐந்து நாள் கிரிக்கெட், 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக வேறொரு வடிவம் எடுத்தது. பிறகு டி20 கிரிக்கெட், ஆரம்பித்த வேகத்தில் ஜெட் வேகத்தில் வளர்ச்சியடைந்தது. இந்த மாற்றங்களால் கிரிக்கெட்டில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகள் கிடைத்தன. இப்போது 10 ஓவர் கிரிக்கெட் அமலுக்கு வரவுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ஷாஜி உல் முல்க், 10 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஷார்ஜாவில் நடத்தவுள்ளார். டிசம்பர் 14 அன்று டி10 கிரிக்கெட் லீக் போட்டி (டிசிஎல்) தொடங்கவுள்ளது. டிசிஎல் போட்டியை நடத்த ஐசிசி அனுமதி அளித்துள்ளது. இலங்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கங்களும் இப்போட்டியை அங்கீகரித்துள்ளன. ஐபிஎல் போட்டியை பிசிசிஐ நடத்துவதுபோல டிசிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் சங்கம் அங்கீகரித்துள்ளது. 

மராத்தா அராபியன்ஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாபி லெஜண்ட்ஸ், பாக்தூன்ஸ், கேரளா கிங்ஸ், கொழும்பு லயன்ஸ் ஆகிய 6 அணிகள் இந்தப் போட்டியில் இடம்பெறவுள்ளன.

இந்தப் போட்டியின் ஒவ்வொரு ஆட்டங்களும் 90 நிமிடங்கள் நடக்கும். 10 ஓவர்கள் மட்டுமே ஓர் அணிக்கு வழங்கப்படும். சேவாக், கிரோன் பொலார்ட், சுனில் நரைன், முகமது அமீர், சகிப் அல் ஹசன், தமிம் இக்பால், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், சங்கக்காரா, சாகித் அஃப்ரிடி, சர்ஃபராஸ் அகமது, ஃபகார் ஜமான், டேரன் சாமி, அலெக்ஸ் ஹேல்ஸ் போன்ற பிரபல வீரர்கள் இதில் பங்கேற்கிறார்கள். பாகிஸ்தான், வங்கதேசம், மே.இ. வீரர்கள் ஆகிய அணிகளில் இருந்து பெரும்பாலான வீரர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்தப் போட்டியில் முன்னாள் வீரர் சேவாக் கலந்துகொள்ளவுள்ளார். மராத்தா அராபியன்ஸ் அணியின் கேப்டனாக சேவாக் நியமிக்கப்பட்டுள்ளார். சங்கக்காரா, ஃபகார் ஜமான் போன்ற பிரபல வீரர்கள் இந்த அணியில் உள்ளார்கள். இந்த அணியின் அலோசகராகவும் பயிற்சியாளராகவும் வாசிம் அக்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். 

பெங்கால் டைகர்ஸ் அணியின் கேப்டனாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா கிங்ஸ் அணியில் கிரோன் பொலார்ட், சகில் அல் ஹசன், இயன் மார்கன், வஹாப் ரியாஸ், சொஹைல் தன்வீர் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். பெங்கால் டைகர் அணியில் சுனில் நரேன் இணைந்துள்ளார். கொழும்பு லயன்ஸ் அணியை தினேஷ் சண்டிமல் வழிநடத்துகிறார். பாக்தூன் அணியில் அஃப்ரிடி இடம்பிடித்துள்ளார். 

டிசம்பர் 17 அன்று இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

அணிகளின் விவரங்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com