Enable Javscript for better performance
அரசுப் பணி: சவிதா நம்பிக்கை- Dinamani

சுடச்சுட

    
    savitha

    ஆசிய கோப்பை ஹாக்கி வெற்றியின்மூலம் தனக்கு அரசுப் பணி கிடைக்கும் என்று இந்திய மகளிர் ஹாக்கி அணி கோல்கீப்பர் சவிதா பூனியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ஹரியாணாவைச் சேர்ந்த சவிதா, ஆசிய கோப்பை மகளிர் அணியில் இடம்பெற்றிருந்தார். ஜப்பானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், 'ஷூட் அவுட்' முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்து இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது.
    இதில், அணியின் வெற்றியைத் தீர்மானிக்கும் 'ஷூட் அவுட்' முறையில் சீன வீராங்கனையின் கடைசி கோல் முயற்சியை சிறப்பாகத் தடுத்து, அணியை 'த்ரில்' வெற்றி பெறச் செய்தார் சவிதா. அத்துடன், அந்தப் போட்டியில் சிறந்த கோல்கீப்பர் என்ற விருதையும் சவிதா பெற்றார்.
    கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் சார்பில் தனக்கு, இன்னும் மத்திய அரசிலோ, மாநில அரசிலோ வேலை கிடைக்கவில்லை என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
    ஆசிய கோப்பையைக் கைப்பற்ற நானும் பங்களித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அணியின் வெற்றிக்காகக் கடுமையாக உழைக்கிறேன். எனக்கு அரசுப் பணி கிடைக்கவில்லை என்ற ஆதங்கம், ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்கிறேன். கடந்த 9-ஆண்டுகளாக அரசு பணிக்காக முயற்சித்து வருகிறேன்.
    ஹரியாணாவில், பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு அரசுப் பணி வழங்கும் திட்டத்தின் கீழ் எனக்கு பணி வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்தப் பணியும் கிடைக்கவில்லை. தற்போது எனக்கு 27 வயதாகிறது. இன்றுவரை எனது தந்தையின் வருமானத்தைதான் சார்ந்திருக்கிறேன். ஒவ்வொரு வெற்றிக்கு பிறகும் எனக்கு அரசு வேலை கிடைக்கும் என்று காத்திருக்கிறேன். எனினும், ஆசிய கோப்பை வெற்றியானது எனக்கு பணியை பெற்றுத் தரும் என நிச்சயமாக நம்புகிறேன் என்றார் சவிதா.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai