Enable Javscript for better performance
குளமான நெல்லை அண்ணா விளையாட்டு மைதானம்: மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா ?- Dinamani

சுடச்சுட

    

    குளமான நெல்லை அண்ணா விளையாட்டு மைதானம்: மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா ?

    By ஏ.வி.பெருமாள்  |   Published on : 08th November 2017 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nellai-anna-ground

    பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தேங்கியுள்ள மழை நீர்.

    பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதான வளாகத்தில் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. கால்பந்து மைதானமும், செயற்கை ஓடுதளமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் மழை நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
    திருநெல்வேலியில் உள்ள மிகப்பெரிய விளையாட்டு வளாகம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானம். இங்கு செயற்கை இழை தடகள ஓடுதளம் , ஹாக்கி மைதானம், கால்பந்து, வாலிபால், ஸ்கேட்டிங் மைதானம், நீச்சல் குளம் என பல்வேறு விளையாட்டுகளுக்கான ஆடுகளங்கள் அமைந்துள்ளன. 
    ஆனால் சரியான வடிகால் வசதி இல்லாததால் இந்த மைதானத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. குறிப்பாக கால்பந்து மைதானம் மற்றும் செயற்கை இழை ஓடுதளத்தில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்தனர். 
    மைதீன்கான் குற்றச்சாட்டு: 
    இதுகுறித்து, முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும், பாளையங்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினருமான டிபிஎம் மைதீன்கான் கூறியதாவது:
    மைதானம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. அண்ணா விளையாட்டு மைதானத்தில் 2 மாதங்களுக்கு முன்புதான் சுமார் ரூ.3 கோடி செலவில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கப்பட்டது. 
    இன்னும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் செயற்கை இழை ஓடுதளம் நீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணிகளை சரியாக செய்யவில்லை. அதன் காரணமாகவே மழை நீர் தேங்குகிறது. மேலும் கம்பு ஊன்றித் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற தடகள விளையாட்டுகளில் பயன்படுத்தக்கூடிய மெத்தை (ஜம்பிங் பெட்) மழையில் நனைந்து கேட்பாரற்று கிடக்கிறது.
    கால்பந்து மைதானத்தில் மழை நீர் தேங்கி குளம்போன்று காட்சியளிக்கிறது. இதனால் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. விளையாட்டு விடுதியும் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. அங்கு முழுமையான குடிநீர் வசதியில்லை. எனது தொகுதி நிதியிலிருந்து குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (ஆர்.ஓ.) அமைத்து தருவதற்கு தயாராக இருக்கிறேன். அதை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் தெரிவித்துவிட்டேன். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. எனவே, மைதானத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். இங்கு தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    திருநெல்வேலி முழுவதும் டெங்கு ஒழிப்புப் பணியில் தீவிரம் காட்டி வரும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அண்ணா விளையாட்டு மைதானத்தையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    நடவடிக்கை எடுத்து வருகிறோம்: வீரபத்ரன் இதுதொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் வீரபத்ரன் கூறியதாவது: 
    செயற்கை இழை ஓடுதளத்துடன் கூடிய கால்பந்து மைதானம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. மழை பெய்கிறபோது தண்ணீர் தேங்குகிறது. கால்பந்து மைதானத்தை உயர்த்த அதிக அளவில் செம்மண் தேவைப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறையிடம் கேட்டிருக்கிறோம். அவர்களும் 3 குளங்களில் இருந்து மண் தருவதாகக் கூறியிருக்கிறார்கள். மழை காலம் முடிந்த பிறகு கால்பந்து மைதானம் தண்ணீர் தேங்காத அளவுக்கு உயர்த்தப்படும். 
    தற்போதைய நிலையில் கால்பந்து மைதானத்தில் தண்ணீர் தேங்கியிருந்தாலும், அதில் பிளீச்சிங் பவுடரை தூவி, கொசு உற்பத்தியாகாதவாறு பார்த்துக் கொள்கிறோம். மழையால் செயற்கை இழை ஓடுதளத்துக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. முறையான வடிகால் வசதி இருக்கிறது. 'ஜம்பிங் பெட்' மேல் பகுதியில் ரெக்ஸின் உறை போட்டிருக்கிறோம். அதனால் மழையால் பாதிப்பு ஏற்படாது.
    விளையாட்டு விடுதியில் எவ்வித சுகாதார சீர்கேடும் இல்லை. சுத்தமாக இருக்கிறது. தினந்தோறும் 20 கேன் குடிநீர் வாங்குகிறோம். சட்டப் பேரவை உறுப்பினர் டிபிஎம் மைதீன்கான் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கித் தந்தால் அதை மனதார ஏற்றுக்கொள்கிறோம். பள்ளமான இடங்களை நிரப்ப மண் வேண்டும் என அவரிடமும் கேட்டிருக்கிறேன். இந்த மைதானத்தை மேம்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai