Enable Javscript for better performance
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: முதல் முறையாக கைப்பற்றியது இந்தியா- Dinamani

சுடச்சுட

    

    நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: முதல் முறையாக கைப்பற்றியது இந்தியா

    By DIN  |   Published on : 08th November 2017 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    champion

    வெற்றிக் கோப்பையுடன் இந்திய அணியினர்.

     

    நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ள இந்தியா, நியூஸிலாந்துக்கு எதிராக டி20 தொடரை முதல் முறையாக கைப்பற்றிய பெருமையை பெற்றுள்ளது.

    இதற்கு முன்பு நியூஸிலாந்துடன் 5 டி20 தொடர்களில் விளையாடியுள்ள இந்தியா, அதில் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெற்றதில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

    திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டம், மழையால் தாமதமானது. சுமார் 9.15 மணியளவில் தொடங்கப்பட்ட ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச தீர்மானித்தது.

    முதலில் பேட் செய்த இந்தியா 8 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 8 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்து வீழ்ந்தது.

    முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவன் 6 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே ரோஹித் சர்மாவும் ஆட்டமிழந்தார். 9 பந்துகளை சந்தித்திருந்த அவர் 1 பவுண்டரியுடன் 8 ரன்கள் அடித்திருந்தார். தவன், ரோஹித் இருவருமே டிம் செளதி பந்துவீச்சில் சேன்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதையடுத்து, கோலி-ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி களத்துக்கு வந்தது. இதில் 6 பந்துகளை சந்தித்த கோலி ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஐஷ் சோதி பந்துவீச்சில் பவுண்டரி விளாச முயன்ற அவர், டிரென்ட் போல்ட் கைகளில் கேட்ச்சாகினார். தொடர்ந்து களத்துக்கு வந்த மணீஷ் பாண்டே சற்றே நிதானமாக ஆடினார். மறுமுனையில் 6 பந்துகளை சந்தித்த ஷ்ரேயஸ் ஐயர், 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

    ஐஷ் சோதி பந்தை இறங்கி வந்து விளாசிய அவர், கப்டில் கைகளில் கேட்ச் கொடுத்தார். அடுத்து வந்த பாண்டியா நிதானமாக ஆடினார். இந்நிலையில், போல்ட் வீசிய பந்தை மணீஷ் பாண்டே சிக்ஸருக்கு விளாச, கேட்ச் பிடிக்க முயன்ற சேன்ட்னர் நிலைதடுமாறிய நிலையில் பந்தை பிடித்து அருகில் இருந்த கிரான்ட்ஹோம் இடம் வீசினார். அதை அவரும் தவறாமல் பிடிக்க, 11 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டே ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து தோனி களத்துக்கு வர, 8 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது இந்தியா. பாண்டியா 10 பந்துகளில் ஒரு சிக்ஸர் உள்பட 14 ரன்களுடனும், தோனி ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து தரப்பில் டிம் செளதி, இஷ் சோதி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். டிரென்ட் போல்ட் ஒரு விக்கெட் எடுத்தார்.

    பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் கிரான்ட்ஹோம் மட்டும் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார். கிளென் பிலிப்ஸ் 11 ரன்கள் எடுக்க, இதர வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் பூம்ரா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தார். ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை அவரே தட்டிச் சென்றார்.


    சுருக்கமான ஸ்கோர்
    இந்தியா
    பாண்டே 17(11), கோலி 13(6), 
    பாண்டியா 14*(10), தோனி 0*(0)
    பந்துவீச்சு: டிம் செளதி 2/13, 
    இஷ் சோதி 2/23, போல்ட் 1/13
    நியூஸிலாந்து
    கிரான்ட்ஹோம் 17*(10), 
    பிலிப்ஸ்11(9) சேன்ட்னர் 3*(4)
    பந்துவீச்சு: பூம்ரா 2/9, குல்தீப் 1/10


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai