சென்னை ஓபனைப் பறிகொடுத்த பிறகு, சென்னையில் நடைபெறவுள்ள ஏடிபி சேலஞ்சர்ஸ் போட்டி!

சென்னை ஓபனை இழந்ததால் வருத்தத்தில் இருந்த டென்னிஸ் ரசிகர்களுக்கு சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியை நடத்த...
சென்னை ஓபனைப் பறிகொடுத்த பிறகு, சென்னையில் நடைபெறவுள்ள ஏடிபி சேலஞ்சர்ஸ் போட்டி!

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த தெற்காசியாவின் ஒரே ஏடிபி டென்னிஸ் போட்டியான சென்னை ஓபன் புணேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது சென்னை ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 21 ஆண்டுகளாக திருவிழா போன்று நடத்தப்பட்டு வந்த சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியையும், உலகின் முன்னணி வீரர்களையும் இனி நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் காண இயலாது என்பது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, சென்னையின் இளம் டென்னிஸ் வீரர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றம்தான். ஆனால் சென்னை டென்னிஸ் ரசிகர்களுக்கு ஓர் ஆறுதல் செய்தி.

சென்னையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12 முதல் 18-ஆம் தேதி வரையில் 'சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்' போட்டி நடத்தப்பட்ட உள்ளது!

இதுதொடர்பாக, போட்டியை நடத்தும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் (டிஎன்டிஏ) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஏடிபி சேலஞ்சர் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்டிஏடி) மைதானத்தில் நடைபெறும். தொழில்முறை டென்னிஸ் போட்டியாளர்களுக்கான சங்கம் (ஏடிபி), அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) ஆகியவை இந்தப் போட்டியை நடத்துவதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளன. இப்போட்டிக்கான பரிசுத் தொகை ரூ.32 லட்சமாகும். இதில் சர்வதேச அளவிலான வீரர்கள் மற்றும் பிரபல இந்திய டென்னிஸ் வீரர்களும் பங்கேற்க உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, டிஎன்டிஏ தலைவர் எம்.ஏ.அழகப்பன் கூறுகையில், 'இந்தப் போட்டியானது இந்திய வீரர்கள் தங்களது தரவரிசையை மேம்படுத்திக் கொள்ளவும், முதல் 100 இடங்களுக்குள்ளாக வருவதற்கும் உதவுவதாக இருக்கும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழக அரசின் ஆதரவுடன் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இப்போட்டியை நடத்த இயலும் என நம்புகிறோம்' என்றார்.

கடந்த 21 ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி திடீரென மகாராஷ்டிரத்துக்கு மாற்றப்பட்டது சென்னை ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றாக அமைந்தது. 

பேட்ரிக் ராஃப்டர், போரீஸ் பெக்கர், கார்லஸ் மோயா, ரஃபேல் நடால், ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா போன்ற டென்னிஸ் ஜாம்பவான்களால் அலங்கரிக்கப்பட்ட பாரம்பரியம் கொண்டது சென்னை ஓபன். உலகின் தலைசிறந்த இரட்டையர் வீரர்களான லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடியின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய பெருமை சென்னை ஓபனையே சேரும். சென்னை ஓபனில் பட்டம் வென்ற பிறகுதான் பயஸும், பூபதியும் இரட்டையர் பிரிவில் வலுவான இணையாக உருவெடுத்தார்கள். இதேபோன்று இந்தியாவின் முன்னாள் முதல் நிலை வீரரான சோம்தேவ், தமிழகத்தின் முன்னணி வீரர்களான ராம்குமார், ஜீவன் நெடுஞ்செழியன் போன்றவர்களை டென்னிஸ் உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை சென்னை ஓபனையே சேரும். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை 2019-ஆம் ஆண்டு வரை சென்னையில் நடத்துவதற்கு தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும், போட்டியை நடத்தும் உரிமையைப் பெற்றிருக்கும் ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்திருந்தன. 2010 முதல் 2017 வரை சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் டைட்டில் ஸ்பான்சராக இருந்த ஏர்செல் நிறுவனம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு விட்டதால் டைட்டில் ஸ்பான்சரிலிருந்து விலகிவிட்டது. இதையடுத்து புதிய டைட்டில் ஸ்பான்சரை தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் தேடி வந்த நிலையில், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்துடன் செய்திருந்த ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்த ஐஎம்ஜி ரிலையன்ஸ், இப்போது மகாராஷ்டிர அரசுடன் கை கோர்த்துள்ளது. சென்னையில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் போட்டி, புணேவுக்கு மாற்றப்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டு முதல் மகாராஷ்டிர ஓபன் என்ற பெயரில் நடைபெறும் என அறிவித்துள்ளது. சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு ஸ்பான்சர் கிடைக்காததன் காரணமாக அது புணேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இந்தியாவுக்கு வெளியில் செல்லவில்லை என்பது மட்டுமே ஆறுதல் அளிக்கிறது. சீசனின் முதல் போட்டியான சென்னை ஓபனில் ஐரோப்பிய வீரர்கள் அதிக அளவில் பங்கேற்றதற்கான காரணம், சென்னையில் நிலவும் காலநிலையும், ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் நடைபெறும் மெல்போர்ன் நகரில் நிலவும் காலநிலையும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால்தான். ஆனால் மகாராஷ்டிர ஓபன் நடைபெறவுள்ள புணேவில் ஜனவரி முதல் வாரத்தில் கடும் குளிர் நிலவும். அதனால் ஐரோப்பிய வீரர்கள் மகாராஷ்டிர ஓபனுக்கு முன்னுரிமை கொடுப்பார்களா என்பது தெரியவில்லை.

இந்நிலையில் சென்னை ஓபனை இழந்ததால் வருத்தத்தில் இருந்த டென்னிஸ் ரசிகர்களுக்கு சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியை நடத்த தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் முன்வந்துள்ளது. இந்தப் போட்டிக்கு சென்னை டென்னிஸ் ரசிகர்களின் வரவேற்பு எந்தளவுக்கு இருக்கும் என்பது இனிமேல்தான் தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com