தோனியை எல்லோரும் குறி வைப்பது ஏன்?: விராட் கோலி வியப்பு!

பாண்டியாவும்தான் சரியாக விளையாடவில்லை; ஆனால் தோனியை எல்லோரும் குறி வைப்பது ஏன்?...
தோனியை எல்லோரும் குறி வைப்பது ஏன்?: விராட் கோலி வியப்பு!

2-வது டி20 போட்டியில் தோனி 49 ரன்கள் எடுத்தபோதும் அவர் விளையாடிய விதம் விமரிசனங்களை வரவழைத்தது. இதனால் தோனியை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இந்நிலையில் தோனிக்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் பேசியுள்ளார்.

3-வது டி20 போட்டி முடிவடைந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோலி, தோனிக்கு ஆதரவாகப் பேசியதாவது:

தோனியை ஏன் எல்லோரும் குறி வைக்கிறார்கள் எனப் புரியவில்லை. நான் மூன்றுமுறை தோல்வியடைந்தால் என்னை யாரும் விமரிசனம் செய்யமாட்டார்கள். ஏனெனில் நான் 35 வயதுக்கு மேல் இல்லை. 

தோனி நல்ல உடற்தகுதியுடன் உள்ளார். எல்லா சோதனைகளையும் கடக்கிறார். ஆடுகளத்தில் யோசனைகள் கூறுவது மூலமாகவும் அணிக்குப் பங்களிக்கிறார். ஒரு பேட்ஸ்மேனாக இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடினார். 

இந்தத் தொடரில் அவருக்கு பேட்டிங் செய்ய சரியான கால அவகாசம் கிடைக்கவில்லை. எந்த நிலையில் ஆடவருகிறார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்தப் போட்டியில் ஹார்திக் பாண்டியாவாலும் ரன் எடுக்கமுடியவில்லை. ஆனால் ஒருவரை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள்? ராஜ்கோட் டி20 போட்டியில் பாண்டியாவும் ஆட்டமிழந்தார். ஆனால் உங்கள் வசதிக்கு ஏற்றபடி ஒருவரை மட்டும் தாக்குகிறீர்கள். இது நியாயமல்ல. 

தோனி அன்று விளையாடவந்தபோது ஒரு ஓவருக்கு 8.5-9.5 ரன்கள் தேவையாக இருந்தன. முதலில் விளையாடுபவர்களுக்கு எளிதாக இருந்த ஆடுகளம் பின்னால் வந்தவர்களுக்குக் கடினமாக இருந்தது. பிற்பாதியில் ஆடுகளத்தின் தன்மை மிகவும் மாறியிருந்தது. இவை அனைத்தையும் அலசிப் பார்க்கவேண்டும். அணி நிர்வாகத்தினர், எந்தச் சூழலில் ஒரு பேட்ஸ்மேன் ஆடச்சென்றார் என்பதைப் புரிந்துகொள்கிறோம். நாங்கள் உணர்ச்சிவசப்படுவதில்லை. மற்றவர்களின் கருத்துகளில் ஆர்வம் செலுத்துவதில்லை. 

தோனி நன்றாகத்தான் விளையாடிவருகிறார். தன்னுடைய ஆட்டத்தைச் சிறப்பாக வெளிப்படுத்த கடுமையாக முயற்சிகள் செய்கிறார். அவருடைய பொறுப்புகளையும் உணர்ந்துள்ளார். ஆனால் எல்லா நேரங்களிலும் ரன்கள் குவிக்கமுடியாது. தில்லி அவர் அடித்த சிக்ஸர், ஆட்டத்துக்குப் பிறகு தொலைக்காட்சியில் ஐந்துமுறை காண்பிக்கப்பட்டது. ஒரு போட்டியில் அவர் விளையாடவில்லை. உடனே அவரை விமரிசனம் செய்கிறோம் 

தோனி விவரமானவர். தன்னுடைய திறமை, உடற்தகுதி ஆகியவற்றை நன்கு அறிந்தவர். வேறு யாரும் அது குறித்து முடிவெடுக்க வேண்டியதில்லை என்று தோனிக்குத் தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார் கோலி.

2-வது டி20 போட்டி முடிவடைந்தபிறகு, தோனி மீது முன்னாள் வீரர்களான லட்சுமணனும் அகர்கரும் விமரிசனங்களை முன்வைத்தார்கள். லட்சுமணன், ஒரு பேட்டியில், தோனி குறித்து கூறியதாவது:

டி20 போட்டிகளில் 4-ம் நிலையில் களமிறங்கவேண்டியது தோனியின் கடமை. ஆனால் அதிரடியாக ஆட தோனிக்குச் சிறிது நேரம் தேவைப்படுகிறது. 2-வது டி20 போட்டியில் கோலி 160 ஸ்டிரைக் ரேட்டில் ஆடிக்கொண்டிருந்தபோது தோனி 80 ஸ்டிரைக் ரேட் தான் வைத்திருந்தார். ஒரு பெரிய இலக்கை விரட்டும்போது இது போதாது. டி20 போட்டிகளில் இளைஞருக்கு வாய்ப்பு தரவேண்டிய நிலையில் தோனி உள்ளார் என நினைக்கிறேன். வாய்ப்புகள் கிடைக்கும் இளைஞர், சர்வதேச கிரிக்கெட்டில் நம்பிக்கையுடன் முன்னேறுவார். தோனி, ஒருநாள் அணியின் திட்டங்களில் நிச்சயம் உள்ளார். 2-வது டி20 போட்டி, தோனியின் தடுமாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. அது ஓர் உதாரணம் என்று கூறியுள்ளார்.

முன்னாள் வீரர் அஜித் அகர்கர், கிரிக்இன்ஃபோ பேட்டியில் கூறியதாவது: இந்தியா தற்போது வேறு யோசனைகளைச் செயல்படுத்தவேண்டும். குறைந்தபட்சம் டி20யிலாவது. ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் பேட்டிங்கில் இந்திய அணிக்குத் திருப்தியாக உள்ளது என நினைக்கிறேன். ஒரு கேப்டனாக இருந்தால் அவர் அணியில் இல்லாததை நம்மால் உணரமுடியும். ஆனால் ஒரு வீரராக தோனி அணியில் இல்லையென்றால் அவரைத் தவறவிடுவீர்களா என்று கேட்டால் இல்லை என்பேன். டி20 அணியில் தோனியைத் தாண்டி ஏராளமான அனுபவசாலிகள் உள்ளார்கள். தோனி, அதிரடியாக ஆட சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறார். டி20யில் அந்தளவுக்கு வாய்ப்புகள் இல்லை. வேறு நிலைகளில் இருந்து அவர் ஆடவேண்டும் என்று மக்கள் சொல்வதைக் கேட்டுள்ளேன். ஆனால் இந்தப் போட்டியில் அவர் 10-வது ஓவரில் விளையாட வந்தார். இதுபோல எத்தனை முறை இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும்? அவர் திறமையை வெளிப்படுத்த நிறைய நேரம் இருந்தது என்றார்.

முன்னாள் வீரர் சேவாக், தோனியின் டி20 ஆட்டம் குறித்துக் கூறியதாவது: தனக்கான பொறுப்புகள் என்ன என்பதை தோனி உணர வேண்டும். பெரிய இலக்கை விரட்டும்போது ஆட்டத்தின் போக்கை ஆரம்பத்திலிருந்தே அவர் மாற்றவேண்டும். முதல் பந்திலிருந்து அடித்தாடவேண்டும். இந்திய அணி நிர்வாகம் இதை அவருக்கு உணர்த்த வேண்டும். ஆனால் டி20 கிரிக்கெட்டிலும் கோலி அணிக்கு தோனி தேவைப்படுகிறார். சரியான நேரத்தில் டி20 போட்டியிலிருந்து தோனி விலகுவார். எந்த ஒரு இளம் வீரருக்கும் இடைஞ்சலாக இருக்கமாட்டார் என்றார்.

ஆனால் தோனிக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார் முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான சுனில் கவாஸ்கர். அவர் கூறியதாவது: லட்சுமணன், அகர்கள் ஆகியோர் அவர்கள் கருத்துகளைச் சொல்ல உரிமையுள்ளவர்கள். இந்திய அணிக்காகப் பல போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். இது அவர்களுடைய கருத்து. அவர்களுடைய கருத்து கேப்டன், தேர்வுக்குழுவின் கருத்துகளோடு ஒத்துக்கொள்ளவேண்டியதில்லை. நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 30 வயதை ஒருவர் தாண்டிவிட்டால் உடனே அவருடைய தவறைக் கண்காணிக்க ஆரம்பித்துவிடுவோம். ஒருவரிடம் அதிகபட்சமாக எதிர்பார்ப்பதால் அவருடைய ஓய்வை நாம் துரிதப்படுத்துகிறோம். 2-வது டி20 போட்டியில் நாம் மற்றவர்களுடைய தவறுகளை அலச மறுக்கிறோம். ஹார்திக் பாண்டியாவின் விக்கெட்டை நாம் பேசுவதில்லை. தொடக்க வீரர்கள் சரியான தொடக்கத்தை அளிக்கவில்லை. அதைப் பற்றி நாம் பேசுவதில்லை. ஆனால், தோனியின் தவறுகளை மட்டும் பேசுகிறோம். இது துரதிர்ஷ்டவசமானது. இதுதான் இந்தியா என்றார். 

இதுபோன்ற விமரிசனங்களையடுத்து, தோனிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார் விராட் கோலி. இதையடுத்து இந்திய டி20 அணியில் தோனியின் இடத்துக்குச் சிக்கல் எதுவும் இருக்காது என்று தெரியவந்துள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ள இந்தியா, நியூஸிலாந்துக்கு எதிராக டி20 தொடரை முதல் முறையாக கைப்பற்றிய பெருமையை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com