Enable Javscript for better performance
ஆசிய மகளிர் குத்துச்சண்டை: தங்கம் வென்றார் மேரி கோம்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய மகளிர் குத்துச்சண்டை: தங்கம் வென்றார் மேரி கோம்

    By DIN  |   Published on : 09th November 2017 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    merigom

    ஆசிய மகளிர் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மேரி கோம்.

    ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.
    இந்தப் போட்டியில் இறுதிச்சுற்றில் 57 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சோனியா லேதர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
    குத்துச்சண்டையில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரும், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான மேரி கோம், வியத்நாமில் புதன்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் 5-0 என்ற கணக்கில் வடகொரியாவின் கிம் ஹையாங் மியை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தன்வசமாக்கினார்.
    கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய மகளிர் குத்துச் சண்டையில் அவர் கைப்பற்றும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு (2003, 2005, 2010, 2012) நடைபெற்ற ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டிகளில் அவர் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    வெற்றி குறித்து 35 வயது மேரி கோம் கூறுகையில், 'தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். கடந்த சில மாதங்களாக எனது வெற்றிக்காகக் கடுமையாக உழைத்த எனது பயிற்சியாளருக்கு நன்றி' என்றார்.
    57 கிலோ எடைப் பிரிவில் சோனியா லேதரை வீழ்த்தி, சீனாவின் யின் ஜுன்ஹுவா தங்கம் வென்றார். சோனியா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
    முன்னதாக, இப்போட்டியில் பங்கேற்றிருந்த இதர 5 இந்திய வீராங்கனைகள் வெண்கலப் பதக்கத்துடன் அரையிறுதியில் வெளியேறினர்.
    இந்தப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது.
    கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 6 பதக்கங்களை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது. அதில், தங்கப்பதக்கம் எதையும் கைப்பற்றவில்லை.
    இதனிடையே, ஆசிய மகளிர் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மேரி கோமுக்கும், போட்டியில் பங்கேற்ற மற்ற வீராங்கனைகளுக்கும் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவர் அஜய் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
    பிரதமர் மோடி வாழ்த்து
    தங்கப் பதக்கம் வென்ற மேரி கோமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
    சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் வெளியிட்ட பதிவில், 'தங்கம் வென்ற மேரி கோமுக்கு வாழ்த்துகள். உங்களது வெற்றியால் இந்தியா பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
    ராத்தோர் வாழ்த்து
    மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் சுட்டுரையில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 'நீங்கள் மறுபடியும் முழு ஆர்வத்துடன் களத்தில் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள். வாழ்த்துகள் மேரி கோம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai