Enable Javscript for better performance
தங்க மங்கைக்கு அரசுப் பணி எப்போது?- Dinamani

சுடச்சுட

  
  savitha

   

  நமது நாட்டில் கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக அதிகம் வரவேற்பைப் பெற்ற விளையாட்டு ஹாக்கி. ஆடவர் அணியும், மகளிர் அணியும் இந்திய ஹாக்கியில் உள்ளன. ஒலிம்பிக்கில் 8 முறையும், உலகக் கோப்பையில் ஒருமுறையும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

  தொடர்ந்து பல்வேறு சர்வதேச போட்டிகளில் இரு அணிகளும் வெற்றி வாகை சூடி வருகின்றன. அப்படிப்பட்ட மகளிர் ஹாக்கி அணியில் கடந்த 9 ஆண்டுகளாக கோல் கீப்பராக இருந்து வருபவர் ஹரியாணாவைச் சேர்ந்த சவீதா புனியா (27). 

  தடைகளைத் தாண்டி... ஹரியாணாவின் சிர்சா மாவட்டத்தில் ஜோத்கன் என்ற கிராமத்தில் கடந்த 1990-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பிறந்தார் சவீதா. இவரது தந்தை மருந்தாளுனராக (ஃபார்மாசிஸ்ட்) பணிபுரிந்து வருகிறார். நடுத்தர குடும்பம்தான். பெண்களிடையே பழைமைவாதத்தை கடைப்பிடித்துவந்த மாநிலத்தில் பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து இந்திய ஹாக்கி அணியில் தவிர்க்க முடியாத கோல்கீப்பராக உருவெடுத்திருப்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல.

  தாத்தா மஹீந்தர் சிங் அளித்த ஆலோசனை மற்றும் விருப்பத்தின்பேரில் ஹாக்கி பயிற்சியில் இணைந்து பயிற்சி பெற்றார் சவீதா. அவரது பயிற்சியாளர் சுந்தர் சிங் காரப் அவருக்கு கோல்கீப்பர் ஆகுமாறு ஆலோசனை கூறி, அதில் கடுமையான பயிற்சியை அளித்தார். கோல்கீப்பராக சவீதா பல்வேறு சாதனைகளை புரிவார் என்று அன்றே அந்த பயிற்சியாளர் கணித்திருக்கிறார்.

  கடந்த 2007-ஆம் ஆண்டு 17 வயதில் தேசிய ஹாக்கி அணியில் இடம்பிடித்தார். சிறப்பாக விளையாடியதால் 18 வயதில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பையில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற அந்தப் போட்டியில் சவீதா சிறப்பாக விளையாடினார்.

  கடந்த ஆண்டு பெல்ஜியத்தில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் போட்டியில் சவீதாவின் சிறப்பான விளையாட்டால் இந்திய ஹாக்கி மகளிர் அணி 5-ஆவது இடம் பிடித்தது. அதன்மூலம், 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றது. 

  100 களம் கண்ட வீராங்கனை: அண்மையில், ஜப்பானில் நடந்துமுடிந்த மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி 'பெனால்டி ஷுட் அவுட்' முறையில் வெற்றி பெற்றது.

  எதிரணியின் கோல் முயற்சியை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு சவீதா தடுத்த காரணத்தினாலேயே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு உறுதியானது. 
  அந்தத் தொடரின் சிறந்த கோல்கீப்பராகவும் சவீதா தேர்வு செய்யப்பட்டார். இதுபோன்று பல போட்டிகளில் சிறந்த தடுப்பானராக அவர் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார்.

  பல்வேறு விருதுகளையும் கைப்பற்றியுள்ள சவீதா, இதுவரை 100-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

  அப்படிப்பட்ட ஒரு வீராங்கனை கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தனக்கு இன்னும் அரசுப் பணி கிடைக்கவில்லை. ஆசிய கோப்பை வெற்றிக்குப் பிறகாவது எனக்கு அரசு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

  இது, சம்பந்தப்பட்ட மாநில அரசை யோசிக்க வைத்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், ஒட்டுமொத்த விளையாட்டு ரசிகர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

  தேவை அங்கீகாரம்: சவீதாவுக்கு இதுவரை மாநில அரசுப் பணியோ அல்லது மத்திய அரசுப் பணியோ அளிக்கப்படவில்லை. 'பதக்கம் வெல்பவர்களுக்கு அரசுப் பணி' எனும் ஹரியாணா மாநில அரசின் சிறப்பு திட்டத்தின்கீழ் சவீதாவுக்கு பணி உத்தரவு அளிக்கப்படும் என்று வாக்குறுதி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறதே தவிர இதுவரை அவருக்குப் பணி அளிக்கப்படவில்லை.

  தங்க மங்கைகளில் ஒருவரான சவீதாவுக்கு அரசுப் பணி அளிப்பதுதான் அவரது திறமைக்கு நாடு அளிக்கும் உரிய அங்கீகாரமாக இருக்கும். கூடிய விரையில் பணி உத்தரவை வழங்கினால் அவரைப் போல நடுத்தர வர்க்கத்திலிருந்து பல மகளிர் இளம் வீராங்கனைகள் இந்திய ஹாக்கி அணியில் சேர அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

  'பெரும்பாலான ஹாக்கி வீராங்கனைகளுக்கு இந்திய ரயில்வே பணி வாய்ப்பினை அளித்து வருகிறது. இருப்பினும், இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட், ஓஎன்ஜிசி நிறுவனம், வங்கிகள் ஆகியவையும் ஹாக்கி வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்பை அளிக்க முன்வர வேண்டும்' என்று சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ரீது ராணியும் வலியுறுத்தியுள்ளார். 

  கிரிக்கெட் போன்று மற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளையும் அரசு கவனத்தில் கொண்டு செயல்பட்டால், பல சர்வதேச போட்டிகளில் இந்தியா பதக்கங்களை அள்ளிவரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai