கிராமப்புற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவேன் : விஸ்வநாதன் ஆனந்த்
By DIN | Published on : 10th November 2017 01:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மாற்றுத் திறனாளி வீரருடன் செஸ் விளையாடும் விஸ்வநாதன் ஆனந்த்.
கிராமப்புற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவேன் என்றார் இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்.
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் தனியார் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 2-ஆவது தேசிய அளவிலான செஸ் போட்டியை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் ஏற்பட்ட வளர்ச்சியால் ஸ்கைப் இணையதளம், மின்னணு சாதனங்கள் மூலம் செஸ் கற்றுக் கொள்வதிலும், அதுதொடர்பான போட்டிகளில் பங்கேற்பதிலும் அதிகமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக உலகளவில் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் செஸ் விளையாட்டில் தற்போது அதிபன், சேதுராமன், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ஜெனித்தா ஆண்டோ உள்ளிட்ட தமிழக வீரர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
கிராமப்புற விளையாட்டு வீரர்களும் செஸ் விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, அவர்களை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை கண்டிப்பாக மேற்கொள்வேன். செஸ் அகாதெமி அமைக்கும் எண்ணம் உள்ளது.
செஸ் போட்டியில் வெற்றி - தோல்வி முடிவுகள் குறித்து கவலைப்படாமல் மகிழ்ச்சிகரமாக விளையாட வேண்டும். வெற்றி பெறுவதினால் மட்டும் சந்தோஷம் கிடைப்பதில்லை. எதிராளியை ஏமாற்றுதல், பிரச்னைகளை எதிர்கொள்ளுதல் போன்றவற்றில் கிடைக்கும் சந்தோஷமே தனி என்றார் விஸ்வநாதன் ஆனந்த்.
முன்னதாக, கல்லூரியின் இயக்குநர் உமா அருண் வரவேற்றார். மேலாண் அறங்காவலர் டாக்டர் அருண், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏ.எம். ராமன், டால்மியா சிமென்ட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் கிருஷ்ணகுமார், மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் கூட்டமைப்பின் செயலாளர் ஜி. காணிக்கை இருதயராஜ், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் சங்கத்தின் செயலாளர் கஸ்தூரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில், தமிழகம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், குஜராத், கோவா, கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.