Enable Javscript for better performance
ஒவ்வொருவரின் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும்: விமர்சனங்களுக்கு தோனி பதில்- Dinamani

சுடச்சுட

  

  ஒவ்வொருவரின் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும்: விமர்சனங்களுக்கு தோனி பதில்

  By DIN  |   Published on : 13th November 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dhoni

  இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ். தோனி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், "வாழ்க்கையில் ஒவ்வொருவரும், தங்களுக்கான பார்வையும், கருத்துகளும் கொண்டிருப்பார்கள். அதை மதிக்க வேண்டும்' என்று அவர் பதிலளித்துள்ளார்.
   அஜித் அகர்கர், வி.வி.எஸ்.லஷ்மண் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் தோனியின் தற்போதைய பங்களிப்பு குறித்து விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். அவர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற பேச்சுகளும் எழுந்தது.
   இந்நிலையில், அந்த விமர்சனங்கள் தொடர்பான கேள்விகளுக்கு துபையில் தனது கிரிக்கெட் அகாதெமி திறப்பு நிகழ்ச்சியின்போது தோனி கூறியதாவது:
   வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு பார்வைக் கோணத்தையும், கருத்துகளையும் கொண்டிருப்பார்கள். அது மதிக்கப்பட வேண்டும்.
   நான் இந்திய அணியில் பங்குவகிப்பது, எனக்கான மிகப்பெரிய ஊக்குவிப்பாக இருக்கிறது. கிரிக்கெட்டில் இருக்கும் பல முன்னணி வீரர்கள் கடவுளின்
   ஆசீர்வாதத்தால் முன்னேறியவர்கள் அல்ல. கிரிக்கெட்டை தங்களின் வாழ்க்கை குறிக்கோளாக கொண்ட அவர்கள், தங்களை அதற்காக மெருகேற்றிக் கொண்டனர். அதை பயிற்சியாளர்களும் பரிசோதிக்கின்றனர். நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
   எந்த ஒரு விஷயத்தின் முடிவுகளை விடவும் முக்கியமாக அதன் நடைமுறைகள் மீதே நம்பிக்கை வைக்கிறேன். முடிவுகள் குறித்து எப்போதுமே நான் கவலைப்பட்டதில்லை. சம்பந்தப்பட்ட நேரத்தில் செய்ய வேண்டிய சரியான செயல் எது என்பதை மட்டுமே நான் சிந்திக்கிறேன். களத்தில் ஆடும்போது 10, 14, 5 என எத்தனை ரன்கள் தேவையிருந்தாலும் இதையே செய்கிறேன்.
   "எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காமல் போனால் என்ன செய்வது?' என்ற சுமையை என்னுள் ஏற்றிக்கொண்டதில்லை. செய்ய வேண்டிய நடைமுறைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று தோனி கூறினார்.
  "ஹெலிகாப்டர் ஷாட்'
   கிரிக்கெட் அகாதெமி திறப்பு நிகழ்ச்சியின்போது தனது ஹெலிகாப்டர் ஷாட் குறித்து பயிற்சி வீரர்களுக்கு விளக்குமாறு தோனியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
   சிறுவயதில் சாலைகளில் டென்னிஸ் பந்து கொண்டு கிரிக்கெட் விளையாடியபோது நான் அந்த ஷாட்டை பழகினேன். அது சற்று கடினமான ஒன்று. டென்னிஸ் பந்தானது பேட்டின் முனைப்பகுதியில் பட்டாலும் அது பறந்துவிடும். ஆனால், உண்மையான கிரிக்கெட்டில் பயன்படுத்தும் பந்துகள், பேட்டின் நடுப்பகுதியில் பட்டால் மட்டுமே அவ்வாறு ஷாட்-ஆக மாறும்.
   அதற்கு அதிக பயிற்சி தேவை. அதன் காரணமாக காயம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால், சிறுவர்கள் அதை முயற்சிக்க வேண்டாம் என கருதுகிறேன் என்று கூறினார்.
  "டி20: தோனி வித்தியாசமாக அணுக வேண்டும்'
   டி20 கிரிக்கெட் ஆட்டங்களை தோனி வித்தியாசமான முறையில் அணுக வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி
   கூறினார்.
   கொல்கத்தாவில் இதுகுறித்து அவர் கூறியதாவது: தோனியின் ஒருநாள் கிரிக்கெட் சாதனைகளுடன் ஒப்பிடுகையில், அவரது டி20 சாதனைகள் சிறப்பானதாக இல்லை. இதுதொடர்பாக கேப்டன் கோலி மற்றும் இந்திய அணி நிர்வாகம் தோனியுடன் தனிப்பட்ட முறையில் பேசும் என நம்புகிறேன்.
   தோனியிடம் அதிகளவிலான ஆற்றல் உள்ளது. டி20 ஆட்டங்களை அவர் சற்று வித்தியாசமாக அணுகும் பட்சத்தில் அதிலும் அவர் வெற்றி பெறுவார். ஒருநாள் கிரிக்கெட்டில் தோனி அதிக பங்களிப்பு செய்துள்ளார். டி20 கிரிக்கெட்டை அவர் சற்று நெருக்கடியின்றி ஆட வேண்டும். அது, அணியின் தேர்வாளர்கள் மற்றும் அவர் எப்படி விளையாட வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள் என்பதைப் பொருத்ததாகும் என்று கங்குலி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai