Enable Javscript for better performance
இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட்: இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    
    ground

    கொல்கத்தாவில் புதன்கிழமை மழை பெய்ததை அடுத்து தார்பாய்கள் கொண்டு மூடப்பட்டிருந்த ஈடன் கார்டன் மைதானம்.

    இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி, கொல்கத்தாவில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
    கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை சென்ற இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துத் தொடர்களிலுமாக 9-0 என்ற கணக்கில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஒய்ட்வாஷ் செய்திருந்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற தொடர்களிலும் வெற்றி நடைபோட்டு வந்துள்ளது.
    வரும் ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் இந்தியாவுக்கு முக்கியமான ஒன்றாகும். எனவே, இலங்கைக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு, அந்த நம்பிக்கையுடன் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது.
    இலங்கையுடனான அந்த தொடருக்குப் பிறகு இந்தியா ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்துள்ளது. எனினும், ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தங்களது மாநிலம் சார் அணியில் விளையாடிய வீரர்கள் தகுந்த பயிற்சியில் உள்ளனர்.
    இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பொருத்த வரையில், தொடக்க வீரர்களாக ஷிகர் தவன், கே.எல்.ராகுல் களம் காண வாய்ப்புள்ளது. இலங்கைக்கு எதிரான கடந்த தொடரில் காயம் காரணமாக இடம்பெறாத முரளி விஜய், இந்தப் போட்டியில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    அந்தத் தொடரில் இரு சதங்கள் விளாசிய சேதேஷ்வர் புஜாரா, அணிக்கான பலமாகத் திகழ்கிறார். மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி, அஜிங்க்ய ரஹானே வலு சேர்க்க, ஆல்ரவுண்டர் வரிசையில் பாண்டியாவுக்குப் பதிலாக அஸ்வின் இணைந்துள்ளார்.
    பந்துவீச்சைப் பொருத்த வரையில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்கள் வியூகத்துடன் இந்தியா களம் காணும் எனத் தெரிகிறது. அந்த வகையில் புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது சமி வேகப்பந்து வீச்சிலும், அஸ்வின், ஜடேஜா சுழற்பந்துவீச்சிலும் அதிரடி காட்ட உள்ளனர்.
    மறுபுறம், சொந்த மண்ணில் இந்தியாவிடம் வீழ்ந்த இலங்கை ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுடன் மோதிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2-0 என்ற கணக்கில் வென்று நம்பிக்கையுடன் உள்ளது.
    தற்போது இந்தியாவுடன் மோத இருக்கும் அந்த அணியில் ஏஞ்ஜெலோ மேத்யூஸ், ரங்கனா ஹெராத் ஆகிய இருவர் மட்டும் இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். கேப்டன் தினேஷ் சண்டிமல் உள்பட இதர வீரர்களுக்கு இந்தியாவில் இது முதல் டெஸ்ட் போட்டியாகும்.
    அந்த அணியின் பேட்டிங்கில் சமரவிக்ரமா, திமுத் கருணாரத்னே அருமையான தொடக்கத்தை வழங்க வாய்ப்புள்ளது. அவர்களைத் தொடர்ந்து அனுபவம் வாய்ந்த மேத்யூஸ் 4-ஆவது வீரராக களம் காண உள்ளதாக கேப்டன் சண்டிமல் தெரிவித்துள்ளார். பந்துவீச்சு படைக்கு ரங்கனா ஹெராத் தலைமை தாங்குகிறார். அவரை அடுத்து லக்ஷன் சன்டகன், தில்ருவன் பெரேரா ஆகியோர் உள்ளனர்.

    அணிகள் விவரம்
    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, 
    ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது சமி, இஷாந்த் சர்மா.

    இலங்கை: தினேஷ் சண்டிமல் (கேப்டன்), லாஹிரு திரிமானி (துணை கேப்டன்), திமுத் கருணாரத்னே, சதீரா சமரவிக்ரமா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), தில்ருவன் பெரேரா, ரங்கனா ஹெராத், சுரங்கா லக்மல், லாஹிரு காமேஜ், தனஞ்ஜெய டி சில்வா, ஏஞ்ஜெலோ மேத்யூஸ், லக்ஷன் சன்டகன், விஷ்வா ஃபெர்னான்டோ, டாசன் சனகா, ரோஷன் சில்வா.



     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai